Tuesday, July 21, 2015

அழகுடன் திகழணுமா


அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய டிப்ஸஸ்தான் கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்.. மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!

* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.

* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.

* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.

* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.

* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.

* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.

* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.

* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.

* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.

* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.

* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.

* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.

* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.

* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.

* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.

* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.

* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.

* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.

* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.

* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.

கோடைக்கால அழகுப் பராமரிப்பு


நமது நாட்டுத் சீதோஷ்ண நிலை பெரும்பாலும் வெப்பமாகவே இருக்கும். கடும் கோடைக் காலத்தில் இந்த நாள்களை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் எழுவது இயற்கை. நமது முன் ஜாக்கிரதையாலும், அழகு, ஆரோக்கியம் குறித்த அடிப்படை விழிப்புணர்ச்சியாலும் கோடை காலத்தைப் பிரச்சினையில்லாது சுலபமாகச் சமாளித்து விடலாம்.

நமது சருமத்தில் நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் (Melanin pigments) உள்ளது. அதிக நிறத்தை உடையவர்களுக்கு இது குறைவாகவும் தோலின் அடிப்பகுதியிலும் இருக்கிறது. அதனாலேயே அவர்கள் வெயிலில் சென்றவுடனேயே சருமம் சீக்கிரம் சிவந்து விடுகிறது. அதிகமாகவும் அவர்கள் சருமப் பாதிப்பை அடைகிறார்கள். ஆனால் நிறம் குறைந்தவர்களுக்கு இந்த நிறத்தைத் தீர்மானிக்கும் நிறமிகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் தோலுக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய ஒளியினால் அதிக பாதிப்பை அடைவதில்லை. வெயிலினால் சருமப் பாதிப்பை அடைபவர்கள் அவ்வப்போது அழகு நிலையம் சென்று ஃபேஷியல், ப்ளீச் செய்யும்போது முகம் பளிச்சென இருக்கும்.

கோடைக்காலத்தில் சருமம் அதிகமாக வியர்க்கும். வியர்வை அதிகமாகும் பொழுது நாற்றம் எடுக்கும். இதைப் போக்க இருவேளை குளித்து உடைமாற்ற வேண்டும். இறுக்கமான ஆடை அணியக் கூடாது. மெல்லிய பருத்தி ஆடையும், இள நிறமான ஆடையும் அணிவது நல்லது.

வெயில் காலத்தில் நமது தலைமுடிக்கும், குறிப்பாக சருமத்திற்கும் பாதுகாப்பு ரொம்பவே அவசியம்.

வியர்வையினால் தலையில் அதிகமாக அரிப்பு எடுக்கும். பேன் தொல்லை அதிகமாகும்; முடி உதிரும். ஒருவித பாக்டீரியா சருமத்தை அரிக்க ஆரம்பிப்பதால் பொடுகுத் தொல்லையும் அதிகமாகும். பொடுகுத் தொல்லையைப் போக்க தற்பொழுது பொடுகு நீக்கி ஷாம்புகள் (Anti bacterial shampoo) வந்துள்ளன. அவற்றையோ அல்லது மூலிகைகள் கலந்த ஷாம்புவையோ உபயோகப்படுத்தலாம்.

சிகைக்காயிலுள்ள காரத்தன்மையினால், அதை உபயோகப்படுத்தினாலும், பொடுகுத் தொல்லை இராது. முட்டையின் வெண் கருவைத் தலையில் தேய்த்து, சிறிது நேரத்தில் அலசலாம். எதை உபயோகப்படுத்தினாலும் தலையை நீர் கொண்டு சரியாக அலசவில்லையெனில் பொடுகு அதிகரித்துவிடும்.

வால் மிளகைப் பாலில் ஊறவைத்து அரைக்கவும். தலையில் எண்ணெய் தடவி லேசாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலையை ஒரு ஒரு பாகமாகப் பிரித்து அந்த இடத்தில் அரைத்த கலவையைத் தடவி பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். (லேசாக எரிச்சல் கொடுக்கும்) பின்பு தரமான சிகைக்காய்ப் பொடி, அல்லது ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

சிகைக்காயை அரைக்கும் பொழுது அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவைகளைச் சேர்த்து அரைத்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். (வசம்பிற்கு தொற்றைத் தடுக்கும் ஆற்றல் உண்டு)

கண்களுக்கு!

உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்.

சருமப் பராமரிப்பு

எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு தலைமுடிக்கு அருகிலேயே எண்ணெய் சுரப்பி உள்ளது. எண்ணெய் சுரப்பிகளிலிருந்து அதிகம் எண்ணெய் வெளிவரும். வியர்வைச் சுரப்பிகளிலிருந்தும் வியர்வை அதிகமாக வரும். இது குறிப்பாக டீன் ஏஜில் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கும். பருத்தொல்லை கோடைக்காலத்தில் எண்ணெய் சருமத்தில் அதிகமாகிவிடும். அவர்கள் சாதாரண சோப்பை உபயோகப்படுத்தினால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் (fatty acid) எண்ணெய் சருமத்தில் சேரும் பொழுது பிரச்சினையாகி விடும். அவர்கள் எண்ணெய் விலக்கப்பட்ட சோப் வகைகளைப் (Oil free soap) பயன்படுத்த வேண்டும். இதேபோல் Soap free face wavh உண்டு. அதைப் பயன்படுத்தினால் ஃப்ரெஷ் ஆக உணரலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கென்றே பிரத்யேகமாக எண்ணெய் விலக்கப்பட்ட க்ளன்சர், டோனர், மாய்சரைசர் உண்டு. அவற்றை உபயோகப்படுத்தி எண்ணெய் சருமத்தை உடையவர்கள் நல்லவிதமாகப் பாதுகாக்கலாம்.

சருமப் பாதுகாப்பிற்கான டிப்ஸ்:

வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு (1 டீ ஸ்பூன் சாறு) அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

இரண்டு டீ ஸ்பூன் இளநீருடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகள் என எங்கெல்லாம் சூரியஒளி அதிகமாகப்படுகிறதோ, அந்த இடத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.

டீ வடிகட்டிய டிகாஷனை எடுத்துக்கொள்ளவும். (இரண்டாம் முறை உபயோகப்படுத்தியதாக இருக்கலாம். அல்லது லைட்டான டிகாஷனாக இருக்கலாம்.) முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூனுடன் இரண்டு டீ ஸ்பூன் டீ டிகாஷன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவலாம். இந்தக் கலவையை வெயிலில் செல்வதற்கு முன்னும், சென்றுவந்த பிறகும் உபயோகிக்கலாம்.

குளிக்கும் பொழுது:

வியர்வை நாற்றம் போக, குளிக்கும்பொழுது வெதுவெதுப்பான நீரில் சிறிது வேப்பிலையைப் போடவும். அதன் சாறு இறங்கிய பிறகு அதை எடுத்துவிட்டுக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

ஒரு வாளி தண்­ணீரில் 2 சிட்டிகை கற்பூரத்தூளைப் போட்டுக் குளித்தால் வியர்வை நாற்றம் அகலும்.

முகத்திற்கு கோடைக்காலத்திற்கென்று பிரத்யேகமாக பழவகை ஃபேஷியல் செய்வது நல்லது. ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, தக்காளி, வெள்ளரிக்காய், இளநீர் இவைகளைக் கொண்டு முகத்திற்குப் பூசலாம். (சைனஸ் தொந்தரவு உள்ளவர்களைத் தவிர அனைவரும் இந்த முறையைப் பின்பற்றலாம்).

கோடைக்காலங்களில் வெளியில் அலைய நேரிடும்பொழுது இளநீர், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழ ஜூஸ் அருந்துவது நல்லது. சன் ஸ்ட்ரோக் (Sun Stroke) வராமல் தடுக்க ஒரு வெங்காயத்தைக் கையிலோ, உடலிலோ வைத்திருந்தால் சன் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம்.

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை


முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைய


ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

கன்னத்தின் அழகு அதிகரிக்க


கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும். பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!
 
* முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் முகத்தில் ஒருவித பொலிவு கிடைக்கும்.

* மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

* சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.

* எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.

* முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். அதேபோல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.

* சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும். சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்


உங்கள் கண்களை சுற்றியுள்ள திசுக்களை மென்மையாக வைத்திருக்க சிறந்த கண் மாய்‌ஸ்ச்சரைசரை பயன்படுத்தவும்.

உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் இமையின் மீது வைத்துக் கொள்ளவும்.

கண்களின் கரு வளையங்களை போக்க உருளைக் கிழங்கை நறுக்கி கண்களின் மீது தினமும் வைத்து வரவும்.

புருவங்களை திருத்திக் கொள்ள டூத் பிரஷ்ஷை பயன் படுத்தினால் அட்டகாசமாக இருக்கும்.

சருமத்தின் சுருக்கத்தை மறைக்க அங்கு மெஹந்தி இட்டு மறைக்கலாம. அல்லது வைட்டமின் இ ஆயிலை தடவி மங்கச் செய்யலாம்.

நகம் வெட்டும் போது ஓரங்களை வெட்டினால் நகத்தை அது பலமிழக்கச் செய்யும்.

நகக் கணுக்கள் வறண்டு போகாமல் இருக்க வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

நகத்தில் உள்ள வெள்ளைப் பொட்டுகளை நீக்க துத்தநாகம் கலந்த மருந்தை எடுத்துக்கொள்ளவும்.

கால்களை நன்றாக அழகாக வைத்துக் கொள்ள கா‌ல்க‌ளி‌ல் நல்ல எண்ணெய் தேய்த்து பிறகு கால்களை‌க் கழுவவு‌ம்.

கால்களை நீங்களாகவே நன்றாக மசாஜ் செய்யுங்கள் இளமையுடன் உங்கள் கால்கள் இருக்க இதுவே சிறந்த வழி.

உள்ளங்கால்கள் கடுமையாக வறண்டு இருந்தால் சூடான மெழுகு திரவம் கொண்டு தடவவும.

உங்கள் கால்கள் மிருதுவாகவும் அழகாகவும் இருக்க உங்கள் குளியலில் பாலைச் சிறிதளவு சேர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். 

சருமத்தை பளபளப்பாக்கும் சர்க்கரை ஸ்கரப்


முகத்தை அடிக்கடி ஸ்கரப் செய்யும் நாம், நமது உடலை ஸ்க்ரப் செய்வது இல்லை. வறண்டு போன பாதங்கள், கால்களிலும், முழங்கைகளிலும் உள்ள வெடித்து உலர்ந்த சருமம், ஆகியவற்றுக்கு ஸ்க்ரப் தேவை. சிறிது தேங்காய் எண்ணெய், கல் உப்பு அல்லது சர்க்கரை மற்றும் துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

இப்பசையை சருமத்தின் மீது நன்கு தேய்க்கவும். ஸ்க்ரப் செய்யவும். பின்னர் நீராவிக்குளியல் மேற்கொள்ளவும். அடிக்கடி இதனை செய்வது உறுதியான பலனைத் தரும். ஆரோக்கியமான சருமத்தினைப் பெறவும் பேணவும், முறையாக ஃபேஷியல் செய்து வருவது அவசியம். வீட்டிலேயே ஃபேஷியல் செய்து, தரமான சருமப் பராமரிப்பு நிலையத்தில் பெறத்தக்க காஸ்ட்லியான ஃபேஷியலைப் பெறலாம். 

இதற்கு எண்ணற்ற வீட்டுப் பராமரிப்பு முறைகள் உள்ளன. முதலில் இயற்கையின் சருமப் பராமரிப்பு கொடையான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சருமத்தின் மீது சர்க்கரையினால் வட்டமிட்டு தேய்த்து, (ஸ்க்ரப் செய்து) அதன்பின் இளஞ்சூடான வெந்நீரில் சருமத்தைக் கழுவி, மென்மையான துணியைக் கொண்டு ஒற்றியெடுக்கவும். இதனால் சருமம் பளபளக்கும் அதிசயத்தைக் காணலாம். அதே போல், ஒரு பானையில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு வெளிவரும் நீராவியில், சருமம் சில நிமிடங்கள் படும் வண்ணம் காட்டவும். (நீராவிக்குளியல்)

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்


வைட்டமின், கரோட்டினாய்ட்ஸ் நிறைந்த மாம்பழத்தை இரண்டு துண்டுகள் எடுத்து, பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். பப்பாளி, ஆப்பிள் போன்ற சதைப்பகுதி நிறைந்த எல்லா பழங்களையும் பயன்படுத்தலாம். பிளீச்சிங் செய்தது போல் இருக்க வேண்டும் என்பவர்கள், பாலுக்குப் பதில் தயிர் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால், சருமம் அன்று பூத்த மலர் போல் ப்ரெஷ்ஷாக இருக்கும். சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நின்றபடி நாமே செய்துகொள்வதைவிட படுத்துக்கொண்டு, இன்னொருவர் மசாஜ் செய்தால் சருமத்தினுள் நன்கு ஊடுருவும். இதே போல், ஃப்ரெஷ் பன்னீர் ரோஜா, சாமந்தி இதழ்களுடன் மோர் சேர்த்து அரைத்து ஃப்ளவர் ஃபேஷியல் செய்யலாம்.

ஆனால் எக்காரணத்தை கொண்டும் தலையில் வைத்த பூவை கொண்டு பேஷியல் செய்ய கூடாது. மசாஜ் செய்யும்போது, வட்டமாகவும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்ய வேண்டும். இதனால், சருமம் தளர்வடையாமல் காக்கலாம்.

எந்த அழகு விஷயத்தையும், முகத்துக்கு மட்டும் செய்யாமல் கழுத்துக்கும் சேர்த்தே செய்ய வேண்டும். அப்போதுதான், ஒரே மாதிரியாக இருக்கும். இல்லையெனில் முகம் ஒரு நிறத்திலும், கழுத்து ஒரு நிறத்திலும் தெரியும்.

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்



• கற்றாழையின் ஜெல்லை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து கழுவினால், நாளடைவில் கரும்புள்ளிகள் வருவதை தவிர்க்கலாம். 2 வாரங்களில் மாற்றம் தெரிவதை காணலாம். 

• வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் ஆவிப்பிடித்து, முகத்தை நல்ல சுத்தமான துணியால் துடைத்தால், கரும்புள்ளிகள் போய்விடும். இந்த சிகிச்சையை வாரம் இருமுறை செய்ய வேண்டும். 

• கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேனையும் சேர்த்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும். 

• பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும். அப்போது தான் விரைவில் பலன் கிடைக்கும். 

• பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் பாலை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதோடு சருமத்தை மென்மையாக்கும். மேலும் வெயிலால் சருமம் கருமை அடைவதை தடுக்கும் 

• 5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஆவிப்பிடித்து, ஈரமான துணியால் தேய்த்தால், கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.

வயதான தோற்றத்தை போக்கும் கொலாஜன் ஃபேஷியல்


நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன்  (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும்.

வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது.

ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.

கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.