Thursday, February 25, 2016

கருமை நீங்க அருமையான வழிகள்!

இடுப்பின் கருமை
புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். அதைப் போக்க தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில்/பாதாம் எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 5 - 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் கொடுக்கவும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.
பின் கழுத்தின் கருமை
ஒரு ஸ்பூன் தவிடு எடுத்து, ஈரக்கையினால் அதைத் தொட்டு, தினமும் குளிக்கும் முன் கழுத்தின் பின்புறம் மசாஜ் கொடுக்க... இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு, பழுத்த பப்பாளியின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் `பேக்’ போட்டு, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால், கருமை காணாமல் போவதுடன் சருமமும் மிருதுவாகும்.
அக்குள் பகுதியின் கருமை
அக்குள் பகுதிக்குத் தேவையான காற்று கிடைக்காததால் வியர்வை மற்றும் அழுக்கு சேர்ந்து கருமை படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க, வாரம் இருமுறை ஏதாவது எண்ணெயைக் கொண்டு அக்குளுக்கு மசாஜ் கொடுத்து, மாதுளம்பழத்தின் கொட்டைகளை உலர்த்தி செய்யப்பட்ட பவுடர் ஒரு ஸ்பூனுடன் தண்ணீர் சேர்த்துக் குழைத்து, அதனுடன் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் கலந்து மசாஜ் கொடுக்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் தேனுடன், அரை மூடி எலுமிச்சையின் சாறு கலந்து `பேக்’ போடவும். காய்ந்தவுடன் கழுவவும். 15 நாட்களுக்கு ஒருமுறை பார்லரில் `பிளீச்’சும் செய்துகொள்ளலாம்.
பிரேஸியர் லைன்
மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

Tuesday, February 23, 2016

பஞ்சு போன்ற பாதங்களுக்கு..!

ழைக்காலத்தில் பாதங்கள் மிகவும் வறண்டு, வெடிப்புகள் வர ஆரம்பிக்கும்.
“பாதவெடிப்பில், மிக ஆழமாக, ரத்தம் வரும் அளவில் ஏற்படும் வெடிப்புகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு உள்ள பாதவெடிப்புகளுக்கும் பார் லரில் சிகிச்சை எடுக்காமல், தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பதுதான் நல்லது. மிகவும் வறண்ட சருமம் மற்றும் தொடர் பராமரிப்பின்மையால் வரும் பாத வெடிப்புகளுக்கு பார்லர்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறையில் தற்போதைய புதுவரவான ‘ஹீல் பீல்’ சிகிச்சை முறை பற்றிப் பார்ப்போம்.
இதில் மொத்தம் ஐந்து ஸ்டெப்கள் உள்ளன.
முதலில், பாதங்களை க்ளென்சிங் மில்க் கொண்டு நன்கு சுத்தம் செய்வோம். அது பாதத்தின் மேல் படிந்துள்ள அழுக்குகளை நீக்கிவிடும். அடுத்து டிஷ்யூ வடிவில் உள்ள மாய்ஸ்ச்சரைஸரை பாதங்களின் மேல் பரப்பி, அதன் மேலேயே ‘க்ளிங் ராப்’ எனப்படும் கண்ணாடி பேப்பரால், பாதங்களை நன்கு சுற்றிவிடுவோம். இதை 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிட்டுப் பார்த்தால், பாதங்கள் பட்டுபோல மிருதுவாகவும் ஈரப்பதத்துடனும் மாறி இருக்கும். பிறகு, தேவையான அளவு ஸ்க்ரப் க்ரீமை எடுத்து பாதங்களில் அப்ளை செய்து நன்கு அழுந்த மசாஜ் செய்வோம். இதனால் பாதத்தின் மேல் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
இப்போது ஸ்க்ரப் செய்த பாதங்களை ஈரமான டவலால் துடைத்துவிட்டு, ‘பஃபர்’ எனப்படும் யூஸ் அண்ட் த்ரோ உபகரணத்தை வைத்து பாதங்களின் அடிப்பகுதியை நன்கு தேய்த்துவிடுவோம். இதனால் எஞ்சியிருக்கும் இறந்த செல்கள் மற்றும் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் பாலிஷ் செய்ததுபோல வழவழப்பாக இருக்கும்.
கடைசியாக ‘ஹீல் பீல்’ எனப்படும் அதிக ஈரப்பதம் உடைய க்ரீமை பாதங்களில் அப்ளை செய்து மிதமாக மசாஜ் செய்துவிடுவோம்.
இந்த சிகிச்சைக்குப் பின் தினமும் வீட்டில், இரவு உறங்கும் முன் ஒரு பக்கெட் மிதமான சுடுநீரில் சிறிது உப்பும், ஒரு எலுமிச்சைச் சாறும் கலந்து அதில் பாதங்களை மூழ்கவைத்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து பாதங்களைத் துடைத்துவிட்டு, நல்ல மாய்ஸ்ச்சரைஸர் அல்லது சிறிது தேங்காய் எண்ணெயைப் பாதங்களில் தடவி, பாதங்களுக்கு சாக்ஸ் போட்டுக்கொண்டு படுக்கவும்.
மாதம் ஒரு முறை பார்லரில் ‘ஹீல் பீல் சிகிச்சை’, வீட்டில் ரெகுலராக இந்தப் பராமரிப்பு என்று செய்துவந்தால், மழைக்கால பாத வெடிப்புகளை வெல்வதோடு, எப்போதும் பாதங்கள் பஞ்சு போல இருக்கும்!

Monday, February 22, 2016

பனிக்கால பிரச்னைகள்... பதமான யோசனைகள்!

னிக்காலத்தில் முகம், கூந்தல், இதழ், பாதம் மற்றும் நகத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்.
பனியிடமிருந்து முகத்தை மீட்க! 

பொதுவாக கோடைகாலத்தில் பளபளவென இருக்கும் சருமம், பனிக்காலத்தில் உலர்ந்து கறுக்கும். வறட்சியால் முகத்தில் வெள்ளைத் திட்டுகள் (வொயிட் பேட்சஸ்) தோன்றும். தினமும் சோப்புக்குப் பதில் முகத்துக்கு க்ளென்ஸிங் மில்க் உபயோகித்து, ஒரு காட்டன் துணியால் முகத்தைத் துடைக்கவும். ஆய்லி சருமம் மற்றும் பருக்கள் (acene) பிரச்னை உள்ளவர்கள் க்ளென்ஸர் பயன்படுத்திய பிறகு கண்டிப்பாக டோனர் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு டோனர் வேண்டாம். மாஸ்ச்சரைஸர் பயன்படுத்தவும். 

முடிகொட்டும் தொல்லை விலக...

கோடையில் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகக் கூந்தலில் படும்போது, புதிய செல்கள் உருவாகும். அதனால் கோடைக்காலத்தில் முடி உதிர்வு அதிகம் இருக்காது. ஆனால், பனிக்காலத்தில் அல்ட்ரா வயலட் கதிர்கள் கூந்தலில் படாததால் முடி உதிர்வு அதிகரிக்கும். கூந்தல் உலர்ந்துபோகும். இரவு உறங்கும் முன் 10 மில்லி ஆலிவ் ஆயிலுடன் 2 சொட்டு லேவண்டர் ஆயில் அல்லது அரோமா ஆயில் கலந்து கூந்தலில் தடவி ஷவர்கேப் அணிந்து படுக்கவும். மறுநாள் காலை தலைகுளிக்கவும். இப்படி வாரம் ஒருமுறை செய்துவந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முடி உதிர்வு தவிர்க்கப்பட்டு, கூந்தல் உலர்வடையாமல் இருக்கும். இதைச் செய்ய முடியாதவர்கள், `கே.இஸட்’ 

(KZ - Ketoconazole) என்ற பூஞ்சைக்கொல்லி (anti fungal) மற்றும் `Zinc pyrithione’ என்ற கெமிக்கல் உள்ள ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், லோரியல் போன்ற ஷாம்புக்களைப் பயன்படுத்தலாம். கூந்தலின் வறட்சி நீங்கி மென்மையாக, ஹேர் கண்டிஷனர் அல்லது ஹேர் சீரம் பயன்படுத்தலாம். 

இதழ்களுக்கு நெய்!

பனிக்காலத்தில் வெடிப்பது, உலர்ந்து கறுப்பாவது என்று உதடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். பசுநெய்யுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் குழைத்து உதடுகள் முழுக்கத் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து பஞ்சை தண்ணீரில் தோய்த்து உதட்டில் ஒற்றி எடுக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்து வர... கருமை, வெடிப்புகள் மறையும்.

பாதவெடிப்பு...போயே போச்சு!

பித்தவெடிப்பு உள்ளவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, ரெண்டு கிராம் கல் உப்பு கலந்து பித்தவெடிப்புகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி, பிறகு குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவவும். இதை தொடர்ந்து செய்துவர... பித்தவெடிப்பு சரியாகும். 

நகம் உடைவதைத் தவிர்க்க...

பனிக்காலத்தில் நகம் உடைவதைத் தவிர்க்க, அதை ட்ரிம் செய்வது அவசியம். ஜெலட்டின் கிறிஸ்டல்ஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டீ கப் அளவு வெந்நீரில் கரைக்கவும். உள்ளங்கைகளை நனைக்க உதவும் அளவிலான, அகலமான பாத்திரத்தில் அந்தத் தண்ணீரை மாற்றி, நகங்கள் அதில் மூழ்கியிருக்குமாறு கைகளை நீரில் அமிழ்த்தவும். 10 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து, கைகளை காட்டன் துணியால் துடைக்கவும். தவிர, இந்தப் பிரச்னைக்கு ஹேண்ட் அண்ட் பாடி லோஷன் அல்லது நெயில் க்ரீமும் அப்ளை செய்யலாம்

கவனிக்க... 

கோடைகாலத்துக்கு மட்டுமல்ல... பனிக்காலத்திலும் தொடர்ந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். 

பனிக்காலத்திலும் இரண்டு முறை (விரும்பினால் வெந்நீரில்) குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள பூஞ்சை நீங்கும்.

தலைமுதல் கால் வரை... 'தகதக' வென மின்ன வேண்டுமா..?

 `பார்லருக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு?’ என்று பெருமூச்சுவிடும் மணப்பெண்களுக்கும், கல்யாணத்தில் வளையவரும் தோழிகள், உறவுப் பெண்களுக்கும்... வீட்டில், அலுவலகத்தில் அழகு மிளிர வலம்வர விரும்பும் பெண்களுக்கும் வீட்டிலேயே தலை முதல் பாதம் வரை பொலிவாக்கிக்கொள்ளும் வகையிலான பியூட்டி டிப்ஸ்.
கை கருமை நீங்க!

பொதுவாகப் பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால்களுக்குக் கொடுப்பது இல்லை. முகம் மட்டும் பளிச்சென இருந்து கைகள் கருமை படர்ந்திருந்தால், வித்தியாசமாக தெரியும். எனவே, அதை நீக்க, 2 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலந்து, கைகளில் தினமும் மசாஜ் செய்து வரவும். கைகள் இன்ஸ்டன்ட் பிரைட் ஆவதைக் கண்கூடாகக் காணலாம்.

கண்கள் பளிச்சிட..!

ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்களில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கண்களைக் கழுவினால்...புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும் கிடைத்துக் கண்கள் கோலிக்குண்டுகளாய் பளபளக்கும்.

அனைத்து சரும வகைக்குமான ஃபேஸ் பேக்!

எல்லா ஸ்கின் டைப்களுக்கும் செட் ஆகக்கூடிய ஒரு ஃபேஸ் பேக் இது. விதையுள்ள பன்னீர் திராட்சை அரை கிலோவை மிக்ஸியில் அரைத்து காற்றுப்புகாத ஏர் டைட் டப்பாவில் எடுத்து மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்கள் கழித்துத் திறந்து பார்த்தால், அதன் மேற்பரப்பில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் உருவாகி இருக்கும். அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, அதனுடன் 1 டீஸ்பூன் ஆவாரம் பூ பவுடர், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் அரிசி மாவு கலந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபேஸ் பேக் ஆக அப்ளை செய்து, அரை மணி நேரத்தில் முகத்தைக் கழுவவும். கரும்புள்ளிகள் நீங்கி முகம் மலர்ச்சி அடையும். 

கேசம் பளபளக்க!

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் தலா 20 மில்லி சேர்த்துக் கலந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வர, கேசம் பட்டுப்போல மிருதுவாவதுடன் முடி உதிர்வும் நின்று, கேசம் வலுப்பெறும். 

வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி ‘ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்’ உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி.

இளநரை உள்ள பெண்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை, பீட்ருட் சாற்றுடன் ஹென்னா (இரண்டும் கூந்தலுக்குத் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்), 10 கிராம் சர்க்கரை, 2 டீஸ்பூன் கிராம்புத் தைலம் கலந்து தலைக்குப் பேக் போட்டு அலச, முடி இயற்கைக் கருமை பெற்று பளபளக்கும். 

பாதங்கள் பட்டுப்போல ஆக!

தினமும் குளிக்கும்போது ஸ்க்ரப்பரால் பாதவெடிப்புகளை மெதுவாகத் தேய்த்துக் குளித்தாலே, வெடிப்பு அதிகரிக்காமல் தடுக்கலாம். கூடவே மிருதுத்தன்மை பெற, மிதமான வெந்நீரில் 1 டீஸ்பூன் எப்ஸம் சால்ட், 10 மில்லி லிக்விட் சோப், 10 மில்லி எலுமிச்சைச் சாறு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் கலந்து ஒரு மணி நேரம் அதில் காலை ஊறவைத்துக் கழுவவும். இரவு உறங்கச் செல்லும் முன் பாதங்களில் க்யூட்டிகிள் க்ரீம் அப்ளைசெய்து சாக்ஸ் அணிந்துகொண்டு தூங்கினால், பாதம் பூப்போல மென்மையாகும்.

பிறகென்ன... காண்பவர்களை ஆச்சர்யப்பட வைக்கலாம் அழகால்!

முகப்பொலிவுக்கு 5 வழிகள்!

பொலிவான முகத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பொலிவு என்பதற்கு வெள்ளை நிற சருமம் என்று அர்த்தம் இல்லை. எந்த நிறத்தில் இருந்தாலும், முகத்தில் கருந்திட்டுகள் படிவது, சுருக்கங்கள் போன்றவற்றைத் தவிர்க்க, வீட்டில் அவ்வப்போது பழங்களால் ஃபேஷியல் செய்வது நல்லது.

Tuesday, February 16, 2016

அழகு... சில நிமிடங்களில்!


``திங்கள் முதல் சனி வரை வீட்டு வேலை, ஆபீஸ், காலேஜ் என்று நிற்க நேரமில்லாமல் ஓடினாலும், சண்டே சில நிமிடங்கள் செலவிட்டால் சருமம், கூந்தல், கண்கள், பாதம் என அழகு சார்ந்த பிரச்னைகளை நிவர்த்திசெய்து மீளலாம்’’

வெயில் மற்றும் தூசியினால் முகம் வறண்டு காணப்படுபவர்கள் ஒரு டீஸ்பூன் பாலேட்டில் அரிசி மாவு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ, முகம் பொலிவு பெறும். 

 சருமச் சுருக்கங்களுக்கு சிறிதளவு கடலை மாவில் ஆலிவ் ஆயில் அரை டீஸ்பூன், வெண்ணெய் அரை டீஸ்பூன் சேர்த்துக் கலந்து பேக் போட்டுக் கழுவ, சுருக்கங்களுடன் கரும்புள்ளிகளும் குறையும்.
 ஆயிலி ஸ்கின் உடையவர்கள் தினமும் 3 முதல் 5 முறை முகத்தை வெறும் நீரால் கழுவுவது சிறந்தது. அப்படிக் கழுவும்போது குளிர்ந்த நீரில் ஒருமுறை, வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை என மாறி மாறிக் கழுவ, எண்ணெய் சுரப்பு குறையும். 

 ஆய்லி ஸ்கின்னுக்கு கடலை மாவு 100 கிராம், பாசிப்பயறு மாவு 100 கிராம், மஞ்சள்தூள் 10 கிராம் ஆகியவற்றுடன் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பேக் போட்டு காய்ந்தவுடன் கழுவ, முகம் எண் ணெய்ப் பசையில் இருந்து மீளும்.
முடி உதிர்வுக்குத் தீர்வு!

 தினமும் ஃப்ரீ ஹேர் விடுகிறவர்களுக்கு, கூந்தல் சிக்குப் படுவதாலேயே முடி கொட்டும். அவர்கள் தலைக்குக் குளித்தவுடன் பாதி முடி உலர்ந்ததும் ஹேர் சீரத்தை (Hair serum) ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் தேய்த்துவந்தால்   சிக்கு ஏற்படாமல் கூந்தல் பட்டாகும். 

 வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும். 

 பேன் தொல்லைக்கு ஒரு டீஸ்பூன் துளசி பவுடர், ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு டீஸ்பூன் மெடிக்கேர் ஆயில் (மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்) ஆகியவற்றைக் கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்தால், பலன் கிடைக்கும். 

 முடி வலுவில்லாமல் மிகவும் `தின்’னாக காணப்பட்டால், ஒரு வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு டீஸ்பூன் ஹென்னா, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து தொடர்ந்து தலை மற்றும் கூந்தலில் தேய்த்துக் குளித்து வர... கூந்தலின் வலு கூடும்.

கண் சோர்வு... கெட் அவுட்! 

 கண்களில் பஞ்சுவைத்து அதன் மேல் வெள்ளரிக்காய்த் துருவலை 15 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்தால்... சோர்வு, எரிச்சல் நீங்கி கண்கள் புத்துணர்வு பெறும். 

 பயன்படுத்திய டீ பேக் அல்லது இரு முறை டிகாக்‌ஷன் எடுத்த தேயிலை எச்சத்தை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்திருந்து கழுவ... கண் சோர்வு, எரிச்சல் காணாமல் போகும். 

 பாலேட்டுடன் தக்காளி கலந்து கண்களைச் சுற்றி மிருதுவாகத் தேய்த்துக் கழுவ, கருவளையம் நீங்கும். 

உடல் சூடு, உடல் கருமை நீங்க...

 உடலில் சூடு அதிகமானால் முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றைக் கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளிக்க, சூடு நீங்கி உடல் குளிர்ச்சி பெறும். 
ஒரு கிராம் குங்குமப்பூவை கசக்கி 10 மில்லி பாதாம் எண்ணெயில் கலந்து லேசாகச் சூடுசெய்யவும். இதை  உடலில் கருமை படர்ந்துள்ள இடங்களில், தடவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் பாசிப்பயறு மாவால் 5 நிமிடங்கள் மசாஜ் கொடுக் கவும். கருமை நீங்கி உடல் வசீகரிக்கும். 

கை - கால் அழகு பெற...

 கை, கால் கருத்து, வறண்டு காணப்படுபவர்கள் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், சிறிது பாலேடு, ஒரு வாழைப்பழம் ஆகியவற்றைக் கலந்து பேக் போட்டு அரை மணிநேரம் கழித்துக் கழுவ, சருமம் பொலிவு பெறும். 

 ஒரு டப் அல்லது பக்கெட்டில் பாதங்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு... அரை டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது யூகலிப்டஸ் ஆயிலைச் சேர்த்து, அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் பெடிக்யூர் ஃபிரஷ்கொண்டு தேய்க்க, பாதம் வெடிப்புகள் நீங்கி மென்மையாகும்.சண்டே... இனி பியூட்டிக்கான டே!