Sunday, August 9, 2015

ஆர்கானிக் அழகு!

உணவில் மட்டும் இயற்கை முறைக்கு மாறினால் போதுமா? ஆர்கானிக் சாமையும், ஆர்கானிக் மாதுளையும் சாப்பிட்டுவிட்டு சருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தலாமா? ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!

கூந்தலை அலசும் பொடி
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100 கிராம், செம்பருத்தி இலை, வேப்பிலை  தலா 20 ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.
ஒரு கப் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனர்.  
பலன்கள்:  முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்திலும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்

குளியல் பொடி
பச்சைப் பயறு  அரை கிலோ, ரோஜா இதழ்  10 கிராம், வெட்டி வேர்  50 கிராம் இவற்றை அரைத்து, குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். சருமப் பிரச்னை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக்கொள்ளலாம். உடல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண்ணெயை உடல் முழுவதும் தேய்த்த பிறகு, கடலை மாவு போட்டுக் குளிக்கலாம். எண்ணெய் பசை பிரச்னை உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறோடு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து பச்சைப் பயறு கொண்டு குளிக்கலாம்.
பலன்கள்:  சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமைத் திட்டுக்களைப் போக்கும். சருமத் தளர்ச்சியை சரியாக்கும். அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். நிறம் பொலிவு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.
உதட்டுச் சாயம்
பசு வெண்ணெய் அல்லது பால் ஆடையை உதட்டில் தடவலாம். நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயுடன் கலந்து பூசலாம். கொத்தமல்லிச் சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
பலன்கள்: உதடு வறட்சி, வெடிப்புகள் நீங்கி, மென்மையாகும். கருமை நிறம் நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறலாம்.
எண்ணெய் குளியல்
பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், மாலாத்யாதி எண்ணெய் என, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணெயை உடலில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். கூந்தலில், 5 மி.லி நல்லெண்ணெயை இளஞ்சூடாக தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசலாம்.
பலன்கள்: எண்ணெய் கீழிருந்து மேல் தடவுவதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது. உடல் புத்துணர்ச்சி அடையும். உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமத்தில் நிறம் அதிகரிக்கும்.
கண் மை
வெள்ளி விளக்கில் பசுநெய் ஊற்றி, நெய்யில் நனைத்தப் பஞ்சுத் திரியைக் கொண்டு விளக்கேற்றவும். அருகில் இரண்டு பாத்திரங்களை (பிரிட்ஜ் போல) வைக்கவும். கீழே விளக்கு எரிய பாத்திரங்களின் துணையோடு அடிப்பகுதியில் நெய் தடவப்பட்ட வெள்ளித் தட்டை மேலே வைக்கவும்.  20 நிமிடங்கள் வரை எரியவிடுங்கள். தட்டில் படியும் மையை வழித்து, குங்குமச் சிமிழில் சேமித்து, 2  3 துளிகள் நெய் சேர்த்துக் குழைத்துவைத்துக்கொள்ளவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மையைப் பயன்படுத்தலாம். வெள்ளி விளக்குக்குப் பதிலாக, பித்தளை, செம்பு விளக்கு, தட்டுகளையும் பயன்படுத்தலாம்.
பாதாம் கண் மை
மேலே சொன்ன முறையிலே பாதாம் பருப்புகளை குண்டூசியில் குத்தி, நெருப்புக்கு மேலும், தட்டுக்கு கீழுமாக வைத்து 10  20 நிமிடங்கள் வரை சுடலாம். ஊசி முனையைத் துணி வைத்துப் பிடித்துக்
கொள்ளுங்கள். இயற்கையாகவே பாதாமில் எண்ணெய் இருப்பதால், அவை எரியத் தொடங்கும். அந்தச் சாம்பலை எடுத்து, நெய் கலந்து சேமித்துவைக்கலாம். இந்த மையை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.
பலன்கள்:  கண்களில் உள்ள அழுக்கை வெளியேற்றும். கண்களில் உள்ள வர்மப் புள்ளியைத் தூண்டிவிடுவதால், இதனை 'அஞ்சனமிடுதல்’ என்பர். பார்வைத் திறன் அதிகரித்து, தெளிவாகத் தெரியும். கண்களுக்குக் குளிர்ச்சி உண்டாகும். சோர்வு நீங்கும்.

ஆண்கள் அழகாக...


ண்களின் சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சருமத்துக்குச் செய்ய வேண்டிய அழகுக் குறிப்புகள் என்ன? அழகு சாதனப் பொருட்களை எப்படித் தேர்வு செய்வது?
ஆண்கள் பொதுவாகத் தலையில் எண்ணெய் தேய்ப்பது கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உடலைக்கொண்டவர்கள், தலைக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண்ணெய் வைக்கக் கூடாது.
மன அழுத்தம், தலைக்கு எண்ணெய் தேய்க்காதது, சரிவிகித உணவு உண்ணாமை, தூக்கமின்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடி கொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றைச் சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.
ஹேர் ஸ்டரெயிட்டனிங், ஹேர் கலரிங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.
 
ஆண்கள் சந்திக்கும் மிக முக்கியமான  பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவது, அதன் மீது எண்ணெயைத் தடவுவது கூடாது. கொழுப்புச் சத்து மிகுந்த  பொருட்களை உட்கொள்வதை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறைந்துவிடும்.
நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பிடும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அளவிலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாட்களுக்கு ஒருமுறை நகங்க
ளைச் சீராக வெட்ட வேண்டும்.
தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். எனவே நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து, பாதங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால், வெடிப்பு குறையும்.  அலுவலகம் செல்பவர்கள் தரமான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக் கூடாது. இறுக்கமான ஷூ அணியக் கூடாது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம்கொண்டவர்கள் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடுபவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால், சருமத்தின் கடினத்தன்மை மறைந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம். 
பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப்பதால் முகம் புத்துணர்ச்சி அடைவதோடு பிரகாசமாகவும் இருக்கும். முகத்தைச் சுத்தப்படுத்தவே ஃபேஷியல்.
அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வறண்டு போகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வது சருமத்தைப் பொலிவாக்கும். பழங்கள் அதிகம் சாப்பிடுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படுக்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உதட்டுக்குத் தடவுதவன் மூலம், உதடு கருமையாகமல் தடுக்க முடியும்.

இயற்கை தரும் பேரழகு !


பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும்  அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே...
1 கிருமிநாசினியாகும் வேப்பிலை
அழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும்.  இது சரும நோய்களுக்கான சிறந்த கிருமிநாசினி. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளிடமிருந்தும், சூரியக் கதிர்களிடமிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
2 கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
3 இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு
எண்ணெய்ப் பசை நீங்க கடலை மாவும், முகத்தை ஸ்கரப் செய்ய கொண்டைக் கடலை மாவும், முகம் ஊட்டச்சத்துகளைப் பெற பச்சைப்பயறு மாவும் உதவும். மேலும், இவை சருமத்துக்குப் புரதத்தைத் தரக்கூடியவை. சருமம் மென்மையாகும். உடலுக்கு இயற்கையான நறுமணத்தைத் தரும். சருமத்தில் உள்ள கருமையைப் பச்சைப்பயறு மாவு நீக்கும்.
4 தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்
முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும். எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினர், கஸ்தூரி மஞ்சளுடன் சந்தனம், ஆரஞ்சு சாறு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், எண்ணெய்ப் பசை நீங்கி, சருமம் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து, பாத வெடிப்பில் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், பாத வெடிப்புகள் குணமாகும்.
5 தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ
குங்குமப்பூவுடன் தேன் கலந்து, முகத்தில் தடவிவர, இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். பிறப்புஉறுப்பு, அக்குள் போன்ற இடங்களில் பூஞ்சைத் தொற்று இருந்தால், குங்குமப்பூவில் தேன் சேர்த்துத் தடவலாம்.  பாலில் அரை மணி நேரம் குங்குமப்பூவை ஊறவைத்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.  பொலிவு இழந்த சருமத்துக்கும், பருக்கள் நிறைந்த சருமத்துக்கும் துளசி, குங்குமப்பூ கலந்த  விழுதைப் பூசிவர, நல்ல பலன் கிடைக்கும்.
6 இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள். மோரினால்  முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும்.
7 சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்
சருமம் பளபளப்பாக இருக்க, சந்தனத்துடன் பால் கலந்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.  ஃபேஷியல் செய்ய நேரம் இல்லை எனில், பாதாம், பால், சந்தனம் ஆகியவற்றைக் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகத்தில் ஈரப்பதமும், பளபளப்பும் கூடும்.  அரிசி மாவுடன் சந்தனத்தைக் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தால் மூக்கு, தாடைப் பகுதியில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகம் மென்மையாக மாறும். சருமத்தில் சந்தனத்தைப் பூசிவர, வியர்வை சுரப்பிகளைத் தூண்டி, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.
8  பளபளப்பான சருமத்திற்குத் தேன்
தேனுடன் கொண்டைக் கடலை மாவு சேர்த்துக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளக்கும். தேவையற்ற முடியை அகற்ற தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, சூடு செய்த பின், சருமத்தில் தடவி, பஞ்சைவைத்து முடிகளை நீக்கலாம். வெயிலினால் கருத்த சருமம், பளபளப்பு பெற ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து, முகத்தில் தடவலாம்.
9  வயதாவதைத் தடுக்கும் கற்றாழை
கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) குழாய் நீரில் ஏழெட்டு முறை அலசி, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, சருமம் வயதாவது தடுக்கப்படும். கற்றாழையின் சத்துக்கள், சருமத் துளைகளில் ஊடுருவி, இளமையான தோற்றத்தைத் தரும்.  சருமத்தை மிருதுவாக்கும். மாய்ஸ்சரைசர் மற்றும் டோனராக செயல்படும். பருக்கள் முற்றிலுமாக நீங்கும். ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு, கற்றாழை ஜெல்லைத் தடவ, சருமப் பாதிப்புகள் ஏற்படாது. ஈரப்பதத்தை சமன்படுத்தவும், சரும எரிச்சலைப் போக்கவும் பயன்படும்.
10 க்ளென்சராக செயல்படும் நெல்லி
நெல்லிப் பொடியைத் தண்ணீரில் கலந்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், பொடுகு முற்றிலும் நீங்கிவிடும். மருதாணிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, அவுரிப் பொடி மூன்றையும் கூந்தலில் பூச, இளநரை மறைந்து, இயற்கையான கருமை நிறம் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
சருமத்துக்கு க்ளென்சராக செயல்படும். தினமும் காலை, ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர, முடி உதிர்தல் பிரச்னை நிற்கும். நெல்லிச் சாற்றை முகத்தில் தடவினால், அதில் உள்ள கொலஜன் (வெண்புரதம்) சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

Saturday, August 8, 2015

கருவளையமா...கவலை வேண்டாம் !



ரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஒவ்வாமை, தூக்கமின்மை, சீரற்ற மாதவிலக்கு, ரத்தசோகை, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. இவற்றைப் போக்க சில எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும்...
ஸ்ட்ராபெர்ரியில் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடிய ஆல்ஃபா ஹைட்ராக்ஸி, நிறைந்துள்ளது.  ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விழுதை, கண், முகம், கழுத்துப் பகுதியில் பரவலாகத் தடவிவர, கருவளையம் மறையும்.
வெள்ளரிச் சாறும் பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களை சுற்றிலும் தடவி, மென்மையாக மசாஜ் செய்யலாம்.
தினமும் இரவில் ஆலிவ் எண்ணெயை  கண்ணின் கீழ்ப் பகுதிகளில் தடவிவரலாம்.
வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாறு கலந்து, கண்களுக்கு பேக் போட கருவளையம் நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
உருளைக் கிழங்கு சாறில் பஞ்சைத் தோய்த்து, கண்களின் மேல் வைத்து, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். உருளைக் கிழங்கு விழுதுடன், சிறிது தயிர் சேர்த்து, கண்ணின் கருவளையம் மீது போட்டு, மென்மையாக மசாஜ் செய்துவர, கறுப்பு நிறம் மாறும்.
பப்பாளியின் சதைப்பகுதியைப் பாலாடையுடன் சேர்த்து மசித்து, முகம், கழுத்துப் பகுதியில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
ஊறவைத்த பாதாமை பாலுடன் சேர்த்து, மை போல அரைத்து, கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்.
சந்தனம் மற்றும் சாதிக்காயை இழைத்து, கண்களை சுற்றிலும் பூசலாம்.
தேனில் திருநீற்றைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.
தோல் நீக்கிய தக்காளி விழுது, கொட்டை நீக்கிய கறுப்புத் திராட்சை விழுது, இவற்றை கருவளையத்தின் மீது பூசலாம்.
பழங்கள், காய்கறிகள், நட்ஸ், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவம் என அனைத்து உணவையும் தேவையான அளவில் சரியான நேரத்தில் சாப்பிடுவதுடன், ஆழ்ந்த நிம்மதியான தூக்கமும், கண்களுக்கு ஓய்வும் இருந்தால், கருவளையம் பற்றிய கவலை இருக்காது.

அழகாக்கும் ஆயுர்வேதம்!

ளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு சருமத்துக்கான கிரீம்கள் சந்தையில் பிரபலம். உண்மையில் இவற்றால் பலன் பெரிதாக இருக்காது. ஆண்களுக்கு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்க, ஆயுர்வேதத்திலேயே ஏராளமான சிகிச்சைகள் இருக்கின்றன.
முடி கொட்டுதல்
அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில் தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுப்பதே சிறந்தது. செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். பாதாம் எண்ணெய் நன்றாக  முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும்.
கருவளையம்
கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன்களை தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்துவதால், கண்களை சுற்றிக்் கறுப்பு நிறத் திட்டுகள் படியும். இதனைத் தவிர்க்க, கண்ணுக்கு மசாஜ் அவசியம். காலை எழுந்த பிறகும் இரவு தூங்கும் முன்பும், மோதிர விரலால் நல்லெண்ணையைத் தொட்டு, கண்களைச் சுற்றி மென்மையாக கடிகார முள் திசையில் மசாஜ் செய்துகொள்ளலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு நிமிடம் நன்றாகக் கண்களை மூட வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைந்தால், அவ்வப்போது லேசாகக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, கண்களைத் துடைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கண்களைச் சிமிட்டுவது அவசியம்.
கறுமை நிறத் திட்டுகள்
ஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு, கை, கால் மற்றும் முகத்தில் கருமை நிறத் திட்டுகள் உருவாகும். நாளடைவில் தோலின் பொலிவு மறைந்து, முதுமைத் தோற்றம் வந்துவிடும். இவர்கள் கருமை படர்ந்த இடத்தில், ஏலாதி தேங்காய் எண்ணெயும், பிண்டத் தைலமும் தடவி மசாஜ் செய்யலாம். உடல் முழுவதும்கூட மசாஜ் செய்யலாம். பிறகு, நவரா அரிசியுடன் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த பவுடரைக்கொண்டு, நாங்கள் ஸ்க்ரப் செய்வோம். பிறகு, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள் நீங்கி, தோல் பொலிவு அடையும்.
பச்சைப் பயறை பொடியாக அரைத்து, தயிருடன் கலந்து கை, கால், முகம் ஆகியவற்றில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி, சிறிய ஐஸ்கட்டிகளை ஒரு பருத்தித் துணியில்வைத்து, மென்மையாக ஒற்றி எடுத்தால், முகம் பொலிவு பெறும். தக்காளிச் சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வாரம் மூன்று முறை குளிக்கும் முன்பு தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், கறுப்பு நிறத் திட்டுகள் அகலும்.
தோல் வறட்சி                                                                                                                                        
குங்குமப்பூ, தேன், எலுமிச்சைச் சாறு, பால் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள் கொண்டு, மாதம் ஒரு முறை  உடல் முழுவதும் மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் பொலிவு பெறும். தோல் மினுமினுப்பாகும். அடிக்கடி தக்காளி ஜூஸ் அருந்துவது, தோலில் வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.
முகப்பரு நீங்க
இளம் வயதினர் முகப்பரு வராமல் இருக்க, புதினா, கொத்தமல்லி மற்றும் ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த கலவையால், அடிக்கடி ஃபேஸ் பேக் போடலாம். வாரம் இரு முறை இப்படிச் செய்துவந்தால், முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள் குறையும். முகப்பரு வந்தால், கிள்ளக் கூடாது. கிரீம்கள் தடவக் கூடாது. எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முகப்பரு மறைந்ததும், கறுப்பு நிறத் திட்டுகள் உருவாவதைத் தடுக்க, முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.
எண்ணெய் சருமத்தினர் வாரம் இருமுறை அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரோடு அந்த வெந்தயத்தையும் சாப்பிட்டால், உடல் குளுமை அடையும். முகப்பருவும் வராது.

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்...
1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.
2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில் காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.
3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.
4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும். தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.
5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.
6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய  பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.
8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன்படுத்தக் கூடாது.

புத்துணர்வு தரும் ஃபேஸ் வாஷ்

கோடை துவங்கிவிட்டது. வியர்வையும், கசகசப்பும், களைப்புமாய் இருக்கும் முகம் ஃப்ரெஷ்ஷாக, சோப் பயன்படுத்துவதைவிட ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்துக்கு நல்லது. சந்தையில் குவிந்துகிடக்கும் ஃபேஸ் வாஷ்களில் சரியானதை எப்படித் தேர்ந்தெடுப்பது?
தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் ஃபேஸ் வாஷ்களை வாங்கலாம். அதிக ரசாயனங்கள் மற்றும் வாசனைகள் கலந்திருப்பதைத் தவிர்க்கவும். மிதமான ஃபேஸ் வாஷ்களே சிறந்தவை. பி.எச் (pH) அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்கலாம்.
எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம் என ஒவ்வொரு சருமத்துக்கும் பிரத்யேகமான  ஃபேஸ் வாஷ்கள் கிடைக்கின்றன.
எந்த வயதில்?
12 வயதுக்கு மேல் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு சரும மருத்துவர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் நிறைந்த சோப்பு நல்லது.
பரு பிரச்னைக்கு என்ன தீர்வு?
பருக்கள் நிறைந்த சருமத்துக்கு ஆக்னி ப்ரோன் (Acne prone) ஃபேஸ் வாஷ் சிறந்தது. பருக்கள் கொண்ட முகம் உடையவர்கள், ஸ்கரப் கீரீம்களைப் பயன்படுத்தக் கூடாது.
நல்ல தண்ணீர் எது?
குளிர்ந்த அல்லது மிதமான நீரில் முகம் கழுவுவது நல்லது. மிகவும் சூடான நீரில் முகம் கழுவக் கூடாது. அடிக்கடி நீரில் முகத்தைக் கழுவினால், எந்தவிதத் தொற்றுகளும் தூசுகளும் சருமத்தை அண்டாது.
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
ஒருநாளைக்கு மூன்று முறை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிய பிறகு, சன் ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் என அவரவர் சருமத்துக்கு ஏற்ற கிரீம்களைப் பூசிக்கொண்டு வெயிலில் செல்லலாம்.
எப்படி முகம் கழுவுவது?
முகத்தை அழுத்தமாகத் தேய்க்காமல், மசாஜ் செய்வதுபோல மென்மையாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். துடைக்கும்போதும், துணியால் முகத்தை ஒற்றி எடுப்பதே நல்லது.
வியர்வைத் தொல்லைக்குத் தீர்வு
வியர்வை, துர்நாற்றம் பிரச்னை உள்ளோர் ஆன்டி பாக்டீரியல் சோப்பைப் பயன்படுத்தலாம். சருமத்தில் நல்ல கிருமிகளும் இருக்கும் என்பதால், வீரியம் மிக்க ஃபேஷ் வாஷ் மற்றும் சோப்களைத் தவிர்ப்பது நல்லது. நல்ல கிருமிகள் நீங்கிவிட்டால், கெட்ட கிருமிகள் அதிகம் பரவி, சருமத்தைப் பாதிக்கலாம்.
வெளியில் சென்றுவிட்டு வருபவர்கள், முதலில் க்ளென்சரால் முகத்தில் உள்ள அழுக்கு, தூசுக்களை நீக்க வேண்டும். க்ளென்சர் அழுக்கு, தூசை நீக்குமே தவிர, முகத்துக்குப் புத்துணர்வு தராது. மேலும், வழவழப்பும் முகத்தில் ஒட்டி இருக்கும் என்பதால், க்ளென்சிங் செய்த பிறகு, ஃபேஸ் வாஷ்கொண்டு முகத்தைக் கழுவிவிட வேண்டும்.
சருமப் பிரச்னைக்கு!
தேமல், சொரி, சிரங்கு, படை போன்ற சருமப் பிரச்னைகள் சிலருக்கு இருக்கும். ஒவ்வொரு சருமப் பிரச்னையும் குணமடைய,  சில மாதங்கள் பிடிக்கும். 
ஸ்டீராய்டு கலந்த மருந்தைப் பயன்படுத்தினால், பிரச்னை தற்காலிகமாகக் குணமாகும். ஆனால், பின்னர் வீரியமிக்க பிரச்னையில் கொண்டுவிடக்கூடும்.
சுத்தம் மிகவும் அவசியமானது. தினமும் இரண்டு வேளை குளிப்பது நல்லது. பயன்படுத்தும் உடை, காஸ்மெட்டிக்ஸ், துண்டு, கைக்குட்டை, சோப், சீப்பு போன்ற எதையும் மற்றவர்களுடன் பகிர்தல் கூடாது. உள்ளாடைகள், உடைகளைத் தனியாகத் துவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும்.
பொடுகு இருந்தால், ஸ்கால்ப்பிலிருந்து சிகிச்சையைத் தொடங்கும் நிலை ஏற்படும். இதற்கான  பிரத்யேக சிகிச்சைகள் இருப்பதால், சருமப் பிரச்னைகளைக் கண்டு பயம் தேவை இல்லை.

10 கட்டளைகள் சருமம்

உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது, தோலில் வறட்சி, வெடிப்புப் பிரச்னைகள் தோன்றும். சருமத்தில் மாய்ஸ்சரைசர் கிரீமைத் தடவுவது, நீர்ச்சத்துள்ளக் காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளுவது, தினமும் முன்று முதல் ஐந்து லிட்டர் திரவ உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
உண்ணும் உணவு, உபயோகிக்கும் பொருட்களால், சிலருக்குச் சருமத்தில் அரிப்பு, தடிப்பு, சிவந்துபோகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்குச் சரும மருத்துவரை அணுகி, சிகிச்சைப் பெறுவது நல்லது. ஒத்துக்கொள்ளாத உணவை ஒதுக்குவது சருமத்தைக் காக்கும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில்  வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலின், ஒருநாள் தேவையான, 90 சதவிகித இரும்புச் சத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதுடன், சருமம் பொலிவடையும்.
சில பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில், ஆண்களைப் போல அதிக முடி இருக்கும். இது ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம். தற்காலிகத் தீர்வாக, த்ரெட்டிங் மற்றும் வாக்சிங் உதவும். நிரந்தரத் தீர்வுக்கு, லேசர் சிகிச்சை முறை கைகொடுக்கும்.   
பாதங்களில் வெடிப்பு, கால் ஆணி, புண், கொப்பளங்கள் ஏற்படுவதற்குப் பூஞ்சையும், சரியான பராமரிப்பின்மையும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. பூஞ்சைத் தொற்றாக இருந்தால், சரும மருத்துவரைச் சந்திக்கவும். பராமரிப்பின்மை பிரச்னையாக இருந்தால், ‘ப்யூமிக் ஸ்டோன்'னால் பாத சருமத்தை நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரம் இருமுறை பாதங்களை வெந்நீர் டப்பில் விட்டு, எப்சாம் உப்பு (Epsom salt) சேர்த்து, 15 நிமிடங்கள் வைத்திருந்த பின் கழுவலாம்.
தோல் வெளிறிப்போய், கண்ணுக்குக் கீழ் கருவளையம், இமை, புருவமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு இரும்புச் சத்துக் குறைப்பாடு காரணமாக இருக்கலாம்.  தினமும் ஒரு கீரை, பேரீச்சம்பழம், கறிவேப்பிலை, கருப்பு எள், உலர் நெல்லிக்காய் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
 
ரோஜா இதழ்கள், மல்லி, சாமந்தி போன்ற பூக்களை, நன்கு கொதித்த நீரில் போட்டு மூடி, இரண்டு மணி நேரம் கழித்து, ஃப்ரிட்ஜில்வைத்து, அந்த நீரால் குளித்துவர, சருமம் பளபளக்கும். வியர்வை துர்நாற்றத்தையும் போக்கும். 
தோலில்  உள்ள வியர்வைத் துளைகளில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்களாக,  வியர்க்குரு தோன்றுகிறது. தினமும் இரண்டு முறை குளிப்பது, மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, நல்ல காற்றோட்டமான அறையில் இருப்பது போன்றவை சருமப் பிரச்னையிலிருந்து காக்கும்.
சூரியக் கதிர்களால் தோல் பாதிக்கப்பட்டு கருத்துப்போகும். இதைத் தடுக்க, வெளியில் செல்லும்போது, ‘எஸ்பிஃஎப் 15’ சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். கறுப்புக் குடைகளைத் தவிர்த்து, கலர் குடைகளைப் பயன்படுத்தலாம்.
கேரட், பீட்ரூட், தக்காளி, திராட்சை, பப்பாளி, மாதுளை, சிட்ரஸ் பழங்கள், நெல்லி, வெள்ளரி, யோகர்ட், மீன், பாதாம், வால்நட் ஆகியவை, சருமத்தின் கவசங்கள். இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

Friday, August 7, 2015

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!


ண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும்.

'முடி வளருதோ இல்லியோ... இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்றமனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. விளைவு, ஆளாளுக்குச் சொல்லும் ஷாம்பு, எண்ணெய், தைலங்களை வாங்கித் தலையில் கொட்டி, இருக்கும் முடிக்கு வேட்டு வைக்கின்றனர். நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்... இருக்கும் முடியை தக்கவைக்கலாம்... வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்'.
''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்தும், புரதச் சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி... போன்ற பழங்கள் முடி உதிர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தருகின்றன. வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து, பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். பாசிப் பருப்பில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கட்டிய பாசி பயிறு முடியின் வேர்க்கால்களை வலுபடுத்தும்.
பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள் என வாரம் தவறாமல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவேண்டும். கூந்தலை சீவி பிண்ணுவதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். தலைக்கு ஷாம்புவுக்குப் பதில் அரைத்த சீயக்காய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை பயத்தமாவு அல்லது கடலை மாவால் குளிப்பாட்டலாம்.
கருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும். இளநரையும் வராது'' என்கிற வேலாயுதம், வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள, சில மூலிகை தைலங்களைச் சொன்னார்.  
பஞ்ச கர்ப்பம் தைலம்
தேவையானவை: 50 கிராம் கடுக்காய், சிறிது வேப்பிலை. கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு, கரிசிலாங்கண்ணி கரை சாறு - 10 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். 'சடசட’ வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.
குளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்!
கரிசாலைத் தைலம்
தேவையாவை: கரிசலாங்கண்ணி இலை சாறு - 50 மி.லி., நல்லெண்ணெய் 50 மி.லி., வெந்தயம் - 50 கிராம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.
நெல்லி தைலம்
தேவையாவை: நெல்லி சாறு 50 மி.லி., மருதாணி சாறு 50 மி.லி., அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.
அவுரி தைலம்
தேவையானவை: அவுரி இலைச் சாறு 250 மி.லி., நெல்லிச் சாறு 100 மி.லி., நல்லெண்ணெய் அரைக் கிலோ.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவுரி, நெல்லிச் சாறு கலந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.

இனி கெமிக்கல் கண்டிஷனர்கள் எதற்கு... ? எல்லாம் வீட்டிலேயே இருக்கு!

ட்டுப்போன்ற கூந்தல் என்பது கனவல்ல, நிஜமாக்கக்கூடிய அழகே! வறண்டிருக்கும் கூந்தல் பளபளக்க, வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய ‘ஹோம்மேடு ஹேர் கண்டிஷனர் டிப்ஸ்’ இதோ...

* கனிந்த வாழைப்பழம் ஒன்று, இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். கேசத்தின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். வாழைப்பழம் கூந்தலில் பிசுபிசுக்கப் பிடித்துக்கொள்ளும் என்பதால், அலசுவதில் பொறுமை அவசியம். வறட்சி நீங்கி, பொலிவு கூடுவதுடன் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கப்பெறும்.

* 3 - 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதை நேரடியாகச் சூடுபடுத்தாமல், கொதிக்கும் தண்ணீருக்குள் ஒரு பௌலில் வைத்து சூடுபடுத்தி, தலையில், கேசத்தில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். தேன் கூந்தலை மென்மையாக்க, தேங்காய் எண்ணெய், கேசம் இழந்த கெரட்டின் தந்து மெருகேற்றும்; ஹேர் ஃபாலிக்கிள்களை வேரிலிருந்து வலுவாக்கும். 
* ஒரு கப் தயிர், கால் கப் ஆரஞ்ச் ஜூஸ், நான்கு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், கால் கப் தேங்காய்ப் பால், ஒரு முட்டை... அனைத்தையும் அடித்துக் கலக்கிக்கொண்டு, தலையில் தடவிவிட்டு அரை மணி நேரத்தில் மைல்டு ஷாம்பூ கொண்டு அலசுங்கள். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு கேசத்திற்கு மினுமினுப்பு தர, தேங்காய்ப் பாலில் உள்ள விட்டமின் இ மற்றும் கொழுப்பு கேசத்திற்கு ஈரத்தன்மையும் ஊட்டச்சத்தும் தர, தயிரும் முட்டையும் கூந்தலைப் பட்டுப்போல் ஆக்கும்.
* ஒரு கப் தயிர், அரை கப் மயோனைஸ், ஒரு முட்டை மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங் கள். தலையில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் வைத்திருந்து அலசுங்கள். முட்டையில் உள்ள விட்டமின்கள் கேசத்தை ‘ஸ்மூத்’ ஆக்குவதுடன் வறட்சி மற்றும் பொடுகையும் கட்டுப்படுத்தும். தயிரும், மயோனைஸும் குச்சி குச்சியாக இருந்த கேசத்தை சீராக்கி, ஸ்ட்ரெயிட் அண்ட் ஸ்டைலிஷ் ஆக்கும்!

மறக்காமல் தெருவில் இறங்கி நடந்தால் வீடு திரும்பியவுடன் திருஷ்டி சுத்திப்போட்டுக்கொள்ளுங்கள் பெண்களே!

Monday, August 3, 2015

அழகு ஆரோக்கியம் ஆயுர்வேதம்.... காய், கனி, மூலிகை தெரப்பிகள்


மாறிவரும் வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் மாசு, வேலைப் பளு போன்றவற்றால் உடல் சோர்வு, மனச் சோர்வு என ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. விளைவு... கண்களைச் சுற்றி கருவளையம், முடி உதிர்தல், முகம் பொலிவு இழத்தல் போன்ற அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் எழுகின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கம் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
அழகாக, பொலிவாக இருக்க வேண்டும். மாசு மருவற்ற சருமம் வேண்டும் என ஏதேதோ கிரீம்கள் பயன்படுத்தியும் பலன் மட்டும் கிடைப்பது இல்லை. நம்முடைய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில், சரும ஆரோக்கியத்துக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவற்றைச் செய்வதன் மூலம் பிரச்னைகளைச் சரிசெய்து, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். புத்துணர்வும், ஓய்வும், மன அமைதியும் பெற முடியும்.
`சஞ்சீவனம்' ஆயுர்வேத தெரப்பி மையத்தின் அழகுக்கலை மற்றும் உடல் ஆரோக்கிய நிபுணர் அஞ்சலி ரவி சொல்லும் தெரப்பிகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவர் யாழினி தரும் டிப்ஸ்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியம் காக்கும் அசத்தல் வழிமுறைகள்!

சிகிச்சைக்கு முன்பு கவனிக்க வேண்டியவை
நாம் அனைவருமே உடல் நலம், மன நலம் மற்றும் தோற்றத்தைச் சீராகப் பராமரித்துக்கொள்வது முக்கியம். ஆண், பெண் இருவருமே தங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். சிகிச்சை பெறுவதற்கு முன்பு, சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பிரச்னைகளுக்கு தெரப்பி எடுத்தால் மட்டும் போதாது. மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம்தான் பிரச்னையில் இருந்து விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய முடியும்.
ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் பிரச்னைகளைப் பொறுத்து, சிகிச்சைகள் மாறுபடும்.
அவரவர்களுக்கான சிகிச்சை காலமும் மூலிகைகளும் வேறுபடும்.
மசாஜ் மற்றும் தெரப்பிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளாக இருக்க வேண்டும்.
மூலிகை, எண்ணெய், கிரீம் போன்றவற்றை முறையான பக்குவத்துடன் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

கருவளையம் போக்கும் தெரப்பி
ண்கள் தொடர்ந்து சோர்ந்திருந்தால், அதற்குக் கீழ் கருவளையம் உருவாகிறது. இதற்கு, மனஅழுத்தம், தூக்கமின்மை, எலக்ட்ரானிக் கருவிகளை அதிகம் பயன்படுத்துதல், ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யப்படும்.
இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையைவைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விடப்படும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.

பருக்களைப் போக்கும் ஃபேஷியல்
ண்ணெய் பசை சருமத்தினருக்குப் பருக்கள் வருவது இயல்பு. அவை, அதிக அளவில் ஏற்படும்போது, முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும். பருக்களில் சீழ் கோத்துக்கொள்வது, ரத்தம் வருவது, ஊசி குத்துவது போல் வலிப்பது போன்ற பிரச்னைகள் சிலருக்கு இருக்கும். அவர்களுக்கு மசாஜ் மட்டும் செய்யப்படுவது இல்லை. ஏனெனில், பருக்கள் உடைந்து, முகம் முழுவதும் பரவத் தொடங்கிவிடும்.
பருக்கள் ஏற்படுவதற்கு, சருமத்தின் தன்மை, உணவுப் பழக்கம், ஹார்மோன் என, நிறையக் காரணங்கள் உள்ளன. எதனால் பருக்கள் வருகின்றன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
ஓரிரண்டு பருக்கள் இருந்தால், அவர்களுக்கு ஃபேஷியல் செய்யலாம். இதன் மூலம் பருக்கள் மேலும் வராமல் தடுக்க முடியும். இவர்களுக்கு, முதலில் க்ளென்சிங் செய்யப்படும். ஏலாதி எண்ணெய் அல்லது சஞ்சீவனம் ஸ்பெஷல் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யப்படும். அழுக்கு, எண்ணெய் பசை போன்றவை, ஸ்கரப் செய்வதன் மூலமாக நீங்கிவிடும்.
பிறகு, குங்குமப்பூ, துளசி, வேப்பிலை, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவையால் தயாரிக்கப்பட்ட கிரீம் கொண்டு முகத்தில்  ஃபேஸ்பேக் போடப்படும்.  இந்த சிகிச்சைக்கான காலம் ஒரு மணி நேரம். (பேஸ் பேக் போட 15 நிமிடங்கள் உட்பட) இதை மாதத்துக்கு இருமுறை என மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்தால், முகப்பருப் பிரச்னை முற்றிலுமாக நீங்கும். எண்ணெய் உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிட்டு, முழுமையான சிகிச்சையில் ஈடுபட்டால், வெகு சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

பளிச் சரும தெரப்பி
ரு, கருவளையம், மங்கு, உலர் சருமம் போன்ற எந்தப் பிரச்னையாக  இருந்தாலும், இந்த ஸ்பெஷல் தெரப்பியைச் செய்துகொள்ளலாம்.
முதலில், க்ளென்ஸிங் செய்யப்படும். பழச்சாறுகள் அல்லது அவற்றால் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், `நால்பாமரம்' எனப்படும் ஆல், அரசு, அத்தி, இத்தி எனும் நான்கு  மரங்களின் பட்டைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய், தேன் மற்றும் எலுமிச்சை கொண்டு சருமத்துக்கு இதமான மசாஜ் அளிக்கப்படும்.
பாதாம், முந்திரி போன்றவற்றை விழுதாக்கி, அவற்றை முகம் முழுவதும் பூசி ஸ்கரப் செய்யப்படும். பிறகு, மூலிகைகளால் ஆன பேக் போடப்படும். ஒரு மணி நேரம் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை, மாதம் ஒருமுறை செய்துகொண்டால் சருமம் பளபளப்பாகும். முகம் பிரகாசம் அடையும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமம் புத்துணர்ச்சி பெற்று, புதுப் பொலிவு பெறும்.

பொலிவு தரும் மூலிகை சிகிச்சை
சூரியக் கதிர்வீச்சு, கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. தவிர, நாம் பயன்படுத்தும் பல்வேறு சரும கிரீம்கள் காரணமாக, சருமத்தின் சுவாசிக்கும் திறன் பாதிக்கப்பட்டு, முகத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சருமத்துக்குப் பொலிவு தரும் இந்த சிகிச்சையை அனைவரும் செய்துகொள்ளலாம்.
முதலில், முகம் க்ளென்ஸிங் செய்யப்படும். பிறகு, மூலிகை எண்ணெய்களைக்கொண்டு மசாஜ் செய்து, ஸ்க்ரப் செய்யப்படும். ஆயூர்வேதப் பொடிகள், நால்பாமரம், புதினா, கொத்தமல்லி, ஆப்பிள், கேரட் போன்றவற்றின் மூலம் ஃபேஸ்பேக் போடப்படும். ஒரு மணி நேரம் செய்யக்கூடிய இந்த சிகிச்சையை, மாதம் இருமுறை செய்துகொள்ள, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
உலர் சருமம், முகச் சுருக்கம் உள்ளிட்ட அனைத்து விதமான சருமத்தினருக்கும் இந்த மூலிகை சிகிச்சையால் தீர்வு உண்டு.

தலைமுடியை உறுதியாக்கும் புரோட்டீன் பேக்
னைத்து வயதினருக்கும் முடி உதிர்தல் பிரச்னை இருக்கிறது. உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் போன்றவையால் முதலில் பாதிக்கப்படுவது கூந்தல்தான். வழுக்கை விழுந்து, அடர்த்தியே இல்லாத தோற்றத்தைத் தந்து, மனவாட்டத்தை ஏற்படுத்தும். இதற்குச் சிறந்த தீர்வாக புரோட்டீன் பேக் உள்ளது.
இந்த சிகிச்சையில், மூலிகை எண்ணெய்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்யப்படும். பிறகு, ஸ்டீம் செய்யும்போது, மசாஜ் மூலம் தலையில் இருக்கும் எண்ணெய்கள் துவாரங்களின் வழியே உள்ளே சென்று, கூந்தலை வலுவாக்கும். பிறகு, பிரிங்கராஜா, வெந்தயம், ஸ்பைரூலினா (சுருள்பாசி), செம்பருத்தி, தயிர், முட்டை, எலுமிச்சை உள்ளிட்ட 16 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ‘புரொட்டீன் பேக்’ தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும்படி பூசப்படும். ஒரு மணி நேரம் கழித்துக் கூந்தலை அலசிக்கொள்ளலாம். தீவிரமான முடி கொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வாரம் ஒருமுறை செய்துகொள்ளலாம். மற்றவர்கள், மாதம் ஒருமுறை செய்துகொண்டாலே கூந்தல் உதிர்வது நின்று, அழகும் ஆரோக்கியமும் கூடும்.

கருகரு கூந்தலுக்கு ஹென்னா தெரப்பி
ப்போது, இளநரை சகஜமாகிவிட்டது. ரசாயனங்களால் ஆன ஹேர் டை பயன்படுத்தும்போது, அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. மருதாணி மட்டும் பூசினாலும், முடியின் நிறம் பெரிதாக மாறுவது இல்லை. வெள்ளை முடியை மறைக்க, மீண்டும் வராமல் தடுக்க என்ன செய்வது என்று, புலம்புபவர்களுக்கான தெரப்பி இது.
கூந்தலில் உள்ள நரைகளை மறைத்து, கருகருவெனக் கூந்தல் அழகுபெறும். ஆயுர்வேத மருந்துகள், நெல்லி, முட்டை, மருதாணி போன்றவைகொண்டு, கூந்தல் முழுவதும் ‘ஹென்னா பேக்’ போடப்படும். இதனால், உடல் வெப்பம் குறையும். முடி உதிர்வது தடுக்கப்படும்.
முடிக்கு எந்தவித சேதங்களும் இல்லாத இயற்கையான வண்ணத்தை அளிப்பதால், நரை முடிகள் முற்றிலுமாக மறைந்து, அடர் பிரவுன் நிறமாக மாறிவிடும். இயல்பான நிறத்தில் உள்ள முடி, இன்னும் கருமையாகத் தெரியும். ஒரு மணி நேரம் இந்த பேக்கை போட்டுக்கொண்டு, பிறகு அலசிவிடலாம். மாதம் ஒருமுறை ஹென்னா பேக் போட்டால், கருகரு கூந்தலுடன் இருக்கலாம்.

சருமப் பொலிவு தரும் ஸ்பா
டல் முழுதும் செய்யக்கூடிய சிகிச்சை இது. உடலில் வலிகள், பிடிப்புகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கும் அழகான சருமத்தைப் பெறுவதற்கும் இந்த ஸ்பா செய்யப்படுகிறது. முதலில், பால் மற்றும் குங்குமப்பூவைக்கொண்டு உடல் முழுதும் க்ளென்சிங் செய்யப்படும்.
அடுத்து தேன், எலுமிச்சைச் சாற்றினால் மசாஜ் செய்யப்படும். பிறகு, பாதாம், முந்திரி விழுதைக்கொண்டு, உடல் முழுதும் ஸ்கரப் செய்யப்படும். நால்பாமரம் எண்ணெயால் மீண்டும் ஒரு முறை மசாஜ் செய்யப்பபடும். இதனால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். சரும செல்கள் புத்துயிர் பெறும். தூக்கமின்மை, வலி, மனஉளைச்சல் போன்ற பிரச்னைகளிலிருந்துத் தீர்வு பெறலாம். இந்த சிகிச்சையை, திருமணம் செய்ய உள்ள தம்பதிகள் மணமக்கள் பேக்காக (Bride Groom Pack) செய்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கால் வலியைப் போக்கும் ரிலாக்சேஷன் தெரப்பி
நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், அதிகமான உடலுழைப்பு செய்பவர்கள், அசைவுகளே இல்லாமல் வேலை செய்பவர்கள் ஆகியோருக்குக் கால் வலி, பாதத்தில் வலி, எரிச்சல், கணுக்கால் பிடிப்பு போன்ற பிரச்னைகள் இருக்கும். பாதத்தை அழுத்தி, சில மென்மையான புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுத்தாலே பாதிப் பிரச்னை குறைந்துவிடும். மூலிகை எண்ணெய்களும், தைலங்களும் பூசி ரிலாக்ஸ் தெரப்பி செய்வதன் மூலம், வலியை விரட்டலாம். 
இந்த சிகிச்சையின்போது, முதலில் கால்கள் நன்றாகக் கழுவி, சுத்தம் செய்யப்படும். பிறகு, கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை ஊற்றி, மசாஜ் செய்யப்படும். குறைந்தது அரை மணி நேரம் இந்த மசாஜ் செய்யப்படும். மசாஜ் செய்யும்போதே வலிகள் அனைத்தும் பறந்துவிடும். கால்கள் வலுப்பெறும்.
அனைவரும், மாதம் ஒருமுறை ரிலாக்சேஷன் தெரப்பியை செய்துகொள்ளலாம்.

முதுகு மற்றும் கழுத்துக்கான தெரப்பி
ணினி முன் வேலை செய்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் போன்றோருக்கு, முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். நீண்ட நேரம் பயணிப்பவர்களுக்கும் உடல் அசதி வெகுவாக இருக்கும். இவர்களுக்கான தெரப்பி இது.
கழுத்து மற்றும் பின்பக்க முதுகுப் பகுதி சுத்தம் செய்யப்படும். பிரத்யேகமாகத் தயாரித்த சஞ்சீவனம் ஸ்பெஷல் எண்ணெயைக் கலந்து மசாஜ் செய்யப்படும். தோள்பட்டை வலிகள் நீங்கும் அளவுக்கு மென்மையாக ரிலாக்சேஷன் மசாஜ்கள் தரப்படும். மாதம் ஒருமுறை இந்த தெரப்பி செய்துகொண்டாலே போதும். உடலும் மனமும் லேசாகிவிடும். இந்த தெரப்பி செய்துகொள்வதற்கான நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

மன அழுத்தத்தைக் குறைக்கும் தெரப்பி
ன்று குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை, மனஅழுத்தப் பிரச்னை இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மனஅழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கான சிறந்த தெரப்பி இது.
அரோமா எண்ணெயின் வாசம் நம் மூக்கில் நுழைந்து, மூளையின் அதீதச் செயல்பாட்டைக் குறைக்கும். எண்ண ஓட்டங்களைக் குறைத்து, மன அமைதி அடையச் செய்யும். மென்மையான அழுத்தங்களும் வாசமும் தூக்கத்தை வரவழைத்து, உடலை ஓய்வுபெறச் செய்யும். இதனுடன், முகத்தில் அரோமா ஃபேஷியலும் செய்யப்பட்டு, முகமும் பிரகாசமாகும். சிகிச்சையின் நேரம் 120 நிமிடங்கள். மனம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தையும் விரட்டி அடிக்கும் இந்த தெரப்பியை மாதம் ஒருமுறை செய்யலாம்.

உதட்டு சிகிச்சை
தட்டின் நிறமும் உதட்டின் மேல் இருக்கும் வெடிப்புகளுமே நம் ஆரோக்கியத்தைப் பறைசாற்றும். சிகரெட் பழக்கம், அதிகமான எண்ணெய் பொருட்களை உண்பது போன்றவற்றால்,உதடு கருமையாக இருக்கும். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை. க்ளென்சிங் செய்வதன் மூலமாக, உதட்டைச் சுத்தம் செய்யலாம். 
பழச்சாறுகளைக்கொண்டு உதட்டுக்கு மென்மையான அழுத்தம் தரப்படும். ஸ்கரப் செய்த பிறகு, உதட்டுக்கு மூலிகை பேக் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் அலசப்படும். இதனால், கருமை நிறம் குறைந்துவிடும். வாரம் ஒருமுறை இந்த சிகிச்சையை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் அழகான உதட்டைப் பெறலாம். சிகிச்சையின் நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

கால்களுக்கான பேக்
முகம், கை, கழுத்து ஆகியவற்றுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்போம்.  கால்களைக் கவனிக்கவே மாட்டோம். கறுப்பாக, அழுக்குப் படிந்து, நகங்கள் உடைந்து, ஆரோக்கியமில்லாமல் காட்சியளிக்கும். இவற்றைச் சரிசெய்ய கால்களுக்குப் போடும் பேக் மூலம் தீர்வு கிடைக்கும்.
முதலில், கால்கள் நன்றாக சுத்தம் செய்யப்படும்.  மூலிகை எண்ணெயை ஊற்றி, கால்களுக்கு அழுத்த சிகிச்சை தரப்படும். பிறகு, ஸ்கரப் செய்த பின், கால்கள் பொலிவுடன்  இருக்கும்.  பாதம் முழுவதும் ஒவ்வொரு புள்ளியாக அழுத்திவிட்ட பிறகு, கால்களுக்குப் போடப்படும் பிரத்யேக மூலிகைகள் கலந்த எண்ணெயைப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவப்படும்.
மாதம் ஒருமுறை செய்து கொண்டாலே அதிகப் பலன்களைப் பெறலாம்.  சிகிச்சைக்கான நேரமும் 30 நிமிடங்கள்தான்.
பெடிக்கியூர்: நீர் நிறைந்த டப்பில், கால்களை மூழ்கவைத்து செய்யும் சிகிச்சை. க்ளென்சிங், ஸ்கரப், மசாஜ், பேக் என தொடர்ச்சியாகச் செய்யப்படும்.  அரை மணி நேர சிகிச்சையால் கால்களின் பொலிவுகூடும். இறந்த செல்கள் அனைத்தும் உதிர்ந்து, சுத்தமான கால்களாக மாறும்.

கைகளுக்கான சிகிச்சை
ம்ப்யூட்டர் கீ போர்டில் வேலை செய்வதால், விரல்கள் மற்றும் விரல் நுனிகள், அதிகமாக வலிக்கும். நாற்காலியில் சரியான நிலையில் உட்காராமல், கைகளைத் தொங்கப்போட்டு உட்கார்ந்தாலும், கைகள் வலிக்கத்தான் செய்யும். கைகளைச் சரியான இடத்தில்வைத்து, வேலை செய்தால் மட்டுமே ஒரளவுக்கு வலிகள் குறையலாம்.
கைகள் வலி நீங்கவும் கைகளை அழகாக, சுத்தமாகப் பராமரிப்பதற்கும் செய்யப்படும் சிகிச்சை இது. மூலிகை எண்ணெய்களை ஊற்றி, கைகளை மென்மையாகப் பிடித்து, அழுத்தம் தரும் சிகிச்சை செய்யப்படும். பிறகு, ஸ்கரப் மூலமாக சீரான ரத்த ஓட்டம் செல்வதற்கான மசாஜ் செய்யப்படும். அக்குபிரஷர் புள்ளிகளை அழுத்தி, ஓய்வு பெறுவதற்கான சிகிச்சை தரப்படும். 
மாதம் ஒருமுறை கைகளுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டால், வலிகள் பறந்துவிடும். சிகிச்சைக்கான நேரம் 30 நிமிடங்கள்.
மெனிக்கியூர்: நீர் நிறைந்த டப்பில், கைகளை மூழ்கவைத்து செய்யப்படும் சிகிச்சை. க்ளென்சிங், ஸ்கரப், மசாஜ், பேக் என தொடர்ச்சியாகச் செய்யப்படும்.  அரை மணி நேர சிகிச்சையால் கைகள் அழகாகும்.

மூலிகைக்கிழி ஒத்தட சிகிச்சை
வெப்ப காலத்தில் அனைவரும் செய்துகொள்ள வேண்டிய சிகிச்சை இது. இழந்த முகப் பொலிவை மீட்கும் சக்தி மூலிகைக்கிழி ஒத்தடத்துக்கு உண்டு. சூரியக் கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை அழகாக்கும்.
முதலில், க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, மசாஜ் செய்துவிட்டு, பால், குங்குமப்பூவைக்கொண்டு, முகத்தில் மாஸ்க் போடப்படும். தேனும் எலுமிச்சையும் கலந்த கலவையை முகத்தில் பூசி, முகம் கழுவப்படும். பிறகு, மீண்டும் பழச்சாறுகள் பூசப்படும்.
மூலிகை எண்ணெய்களில் கிழியை முக்கி எடுத்து, முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். இதனால், சருமம் நன்கு மேம்படுத்தப்படும். உடல் சூடு குறையும். ஆயுர்வேத மூலிகைப் பொடிகளைக் கலந்து, முகத்தில் பேக் போடப்பட்டு அரை மணி நேரம் கழித்து முகம் கழுவப்படும்.
சிகிச்சைக்கான நேரம் 90 நிமிடங்கள். மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். வெயில் காலத்தில் மாதம் இருமுறை செய்துகொண்டால், பிரகாசமான முகத்தைப் பெறலாம். இந்த சிகிச்சையால், சருமத்தின் உள்வரை சத்துக்கள் ஊடுருவிச் சென்று, முழுப் பலனையும் அளிக்கும்.

சருமம் சுவாசிக்கும் சிகிச்சை
ருமம் சுவாசிக்க, துவாரங்கள் அடைப்பின்றி இருப்பது மிக முக்கியம். சருமத் துவாரங்களைத் திறந்து, மீண்டும் மூடிவைக்கும் சிகிச்சைகளை முறையாகச் செய்தாலே, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
சருமத்தின் தளர்வுத்தன்மை நீங்கி, டைட்டனிங் தோற்றத்தைக் கொடுத்து, இளமையாகக் காண்பிக்கவும் இந்த சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். தக்காளிச்சாறுகொண்டு சுத்தம் செய்த பிறகு, தேனும் எலுமிச்சைச் சாறும் கலந்து, ஃபேஷியல் செய்யப்படும். பிறகு, ஐஸ்கட்டிகளால், முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கப்படும். ஆயுர்வேத மூலிகைகளைக்கொண்டு பேக் போடப்படும். 
 
மாதம் ஒருமுறை செய்யலாம். ஒரு மணி நேரம் இந்த சிகிச்சைக்குத் தேவைப்படும். மன அழுத்தம், அலைச்சல், கதிர்வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட முகம் இந்த சிகிச்சையால் சரியாகிவிடும்.

டிப்ஸ்...டிப்ஸ்...
எண்ணெய் உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் போன்றவை உடல்நலத்தையும் அழகையும் கெடுக்கும்.
கேரட், மீன், தக்காளி, திராட்சை, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிட்டால், சீரான சருமம் கிடைக்கும்.
சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கரைத்து, கை, கால்களில் ஸ்கரப் செய்தால், கை, கால்கள் சுத்தமாகும்.
ரசாயனங்கள் கலந்த கிரீம்கள், எண்ணெய், ஷாம்பு போன்றவற்றைத் தவிர்த்து, எலுமிச்சைச் சாறு கலந்த நீரில் முகம் கழுவுவது, மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, காய்கறிகளைச் சாப்பிடுவது போன்றவற்றால் உடல் அழகு பெறும்.
அழகு நிலையங்களில் செய்யப்படும் ரசாயன ஃபேஷியல்களைத் தவிர்க்கலாம். தக்காளி, எலுமிச்சைச் சாறு, தயிர், தேன், கேரட் போன்றவற்றால் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.
சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்தில் (சன் டேன்), புளித்த தயிரைத் தடவினால், கருமை நீங்கிவிடும்.
கை, கால்களைச் சுத்தப்படுத்த, இளஞ்சூடான நீரில், எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பைப் போட்டு, அதில் கை, கால்களை மூழ்கவைத்தால் கை, கால்கள் அழகாக இருக்கும்.
இளஞ்சூடான நீரில் முகம் கழுவினால், சருமத் துவாரங்கள் திறந்துகொள்ளும். அதற்குப் பின், சாதாரண நீரில் முகம் கழுவ, சருமத் துவாரங்கள் மீண்டும் மூடிக்கொள்ளும்.
உலர் சருமம், தோல் உரிதல் போன்ற எந்த சருமப் பிரச்னையாக இருந்தாலும், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும்  இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை நீர் அருந்துவது நல்லது.
வைட்டமின் ஏ, சி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால், சருமம் பிரகாசிக்கும். பப்பாளி, எலுமிச்சை, கிவி, கேரட், கீரைகள், முட்டை, ஆரஞ்சு, சிவப்பு கொய்யா, தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, காலிஃபிளவர், அன்னாசி, மாம்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைச் சாற்றை வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.
சிலருக்கு உடலில் பித்தம் அதிகமாகி இருக்கலாம். அடிக்கடி, தலைவலி போன்ற பிரச்னைகளும் இருக்கும். இவர்கள், உணவில் புளியை அதிகம் சேர்க்கக் கூடாது. ரத்தத்தைச் சுத்தகரிக்கும், `மஞ்சட்டி' என்ற மாத்திரையை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டுவர, பித்தம் குறைந்து ரத்தம் சீராகும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால், அதன் அறிகுறியாக நமது சருமம் ஆரோக்கியமாகி, அழகாக இருக்கும்.
தினமும் நமது சமையலில், ஏலக்காயில் உள்ள மூன்று விதைகளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவைச் சாப்பிட்டால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சருமம் சீராகும்.
மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சாதாரண நீரால் முகத்தைக் கழுவிக்கொள்வது நல்லது. இதனால், தூசு, அழுக்கு, புகை, சூரியக் கதிர்களின் தாக்கம் போன்ற பாதிப்புகள் குறையும்.
அக்ரூட், உலர் திராட்சை, பேரீச்சை ஆகியவை தலா இரண்டு, பாதாம் நான்கு எடுத்து, இரவில் சிறிது தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும். அடுத்த நாள், இவற்றை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலில் ரத்த உற்பத்தி சீராக இருக்கும். சருமம் பளபளப்பாகும். முடி உதிர்தல் பிரச்னை சரியாகும். உடல் ஆரோக்கியமாகும்.
ஏலாதி தேங்காய் எண்ணெய், நால்பாமராதி எண்ணெய் போன்ற எந்த எண்ணெய் நம் சருமத்துக்குப் பொருந்துகிறதோ, அதை மருத்துவரின் ஆலோசனையுடன் முகம், சருமம் முழுவதும் பூசிக்கொண்டு பிறகு கழுவலாம். குளிக்கும் முன், எண்ணெய் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், சருமம் புத்துயிர் பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.
கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, புரத உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம். முட்டை, முளைகட்டிய பயறு வகைகள், பாதாம், வால்நட், பருப்பு, பால், மோர் ஆகியவற்றைச் சாப்பிட்டால், கூந்தல் உதிர்தல் பிரச்னை நிற்கும். மாலத்யாதி, செம்பருத்தியாதி போன்ற எண்ணெய்களை மருத்துவரின் ஆலோசனையுடன் தடவிவந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகமாகும்.
சீரற்ற ஹார்மோன் செயல்பாடுகள், மெனோபாஸ், மனஅழுத்தம், பொடுகு, ஊட்டச்சத்துக் குறைபாடு, மாசற்ற சூழல், ஏ.சிக்குக் கீழ் உட்காருதல் போன்றவையால் முடி உதிரும். இதில், எந்தக் காரணத்தால் பிரச்னை எனக் கண்டறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகள், உணவு, எண்ணெய் போன்றவற்றைப் பின்பற்றிவந்தால், பிரச்னை சரியாகும்.
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி, கீழாநெல்லி போன்றவற்றைச் சம அளவில் எடுத்து, கூந்தலில் ஹேர் பேக்போட்டு, ஒரு மணி நேரம் கழித்து அலசினால் இளநரை கறுப்பாகும். கூந்தலின் வளர்ச்சி சீராக இருக்கும். கருகருவென அழகாகும்.
காலையில் ஃப்ரெஷ்ஷான காற்றில் 15 நிமிடங்கள் பிராணயாமா செய்வதால், ஆக்சிஜன் சீராக உடலில் பாய்ந்து, ஒவ்வொரு செல்லுக்கும் சென்று, செல்களைத் தூண்டிவிடும். இறந்த செல்களையும் நீக்கிவிடும். தினமும் தவறாமல் நாடிசுத்தி, பிராணயாமா செய்பவர்களின் முகம் பொலிவுடன் காணப்படும்.