Sunday, November 8, 2015

அழகான ஆரோக்கியமான சருமத்துக்கு...


வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும்; பொலிவான, அழகான சருமம் வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. நிறத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால்,  சருமத்தை ஆரோக்கியமாகப் பராமரிப்பதன் மூலம் பொலிவான தோற்றத்தைப் பெற முடியும். கறுப்போ சிவப்போ தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தோலில் ஏற்படும் சில முக்கியமான பிரச்னைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத எளிய தீர்வுகள் சித்த  மருத்துவத்தில் உள்ளன.
முகப்பரு: பதின்பருவத்தில் இருபாலருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றும். ஹார்மோன் மாற்றங்களால்தான் இவை ஏற்படுகின்றன. பருக்கள், தேவையற்ற கொழுப்பால் ஆனவை. உள்ளே சீழ் முளையுடன், வீக்கத்துடன் காணப்படும். பருக்கள் உடைந்தால், இதில் உள்ள சலத்தால் சருமத்தின் பிற பகுதிகளுக்கும் முகப்பரு பரவும். பருக்கள் மறைந்த பின்னர், அந்த இடத்தில் கருநிறத் தழும்புகள் உண்டாகும்.
தவிர்க்க: குளிர்ந்த, சுத்தமான நீரில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். பருக்களை உடைக்கக் கூடாது. பருக்களைப் போக்க, கருஞ்சீரகம், சீரகத்தைப் பசும்பாலில் அரைத்து, முகத்தில் தடவலாம். சங்கை அரைத்துப் பூசலாம். புனுகை அரைத்து, பருவின் மீது பூசலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். பருக்கள் முகம் முழுவதும் வந்து பாதிப்பை ஏற்படுத்தினால், வீட்டு வைத்தியம் செய்வதைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
சிலருக்கு, முகப்பரு மறையும்போது, முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும். இதைப் போக்க, ரோஜா இதழுடன், பாதாம் பருப்பை ஊறவைத்து அரைத்துப் பூசலாம். வெள்ளரிச் சாறு, புதினா சாறு, எலுமிச்சைப்பழச் சாற்றை சம அளவில் கலந்து கரும்புள்ளிகள் மீது தேய்த்துவந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.
வியர்க்குரு: வெயில் காலத்தில் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வியர்வையால் வியர்க்குரு ஏற்படுகிறது. இது சாதாரணமாக சில நாட்களில் மறைந்துவிடும். அதுவே, உடல் முழுவதும் ஏற்பட்டு, அரிப்பை ஏற்படுத்தும்போது பிரச்னையாகிறது.
தவிர்க்க: தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். பருத்தியால் ஆன ஆடையை அணிய வேண்டும். வியர்வை அதிகம் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். வியர்க்குருவைப் போக்க, சந்தன ஊரல் நீரைப் பூசுலாம். ‘பதனி’ எனப்படும் பனை நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இளநீர், நன்னாரி ஜூஸ், வெட்டிவேர், விலாமிச்சைவேர் குடிநீர் மற்றும் குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.
தோல் வறட்சி: சிலருக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். சிலருக்கு, ஏதாவது பாதிப்பு அல்லது சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் சரும வறட்சி ஏற்படும். இதனால் சருமத்தில் வெண்ணிறக் கோடு ஏற்படும். பொதுவாக, கை, கால், வயிற்றுப் பகுதிகளில் சருமம் வறண்டு வெள்ளை வெள்ளையாகத் தெரியும். தொடர்ந்து இதைக் கவனிக்காமல் விடும்போது அரிப்பு ஏற்படலாம்; சொரி சிரங்காக மாற வாய்ப்பு உள்ளது.
தவிர்க்க: போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்து குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். குளிக்கும்போது உடலில் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிக்க வேண்டும். வாரத்துக்கு இரண்டு முறையாவது எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். அருக்கன் தைலம், திரிபலா தைலம் ஆகிவற்றைத் தடவலாம். வறட்சியான சருமத்தில் அழுத்தித் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவு உட்கொள்ள வேண்டும்.
மங்கு: முகத்தில், குறிப்பாக கன்னங்களில் ஆங்காங்கே கறுப்பு நிறமாகப் படர்ந்து காணப்படும். பொதுவாக, பூப்பு முடிந்த நிலை, ஹைப்போதைராய்டிசம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது இவை ஏற்படும். இவற்றால் அரிப்பு இருக்காது. ஆனால், முகத்தின் அழகைக் கெடுத்தபடி இருக்கும்.
தவிர்க்க: நலுங்கு மாவைப் பாலில் கலந்து முகத்தில் பூசலாம். இரண்டு டீஸ்பூன் பசும்பாலில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறைச் சேர்த்தால் பால் திரிந்துவிடும். இந்த திரிந்த பாலைக் குழைத்து மங்கு மீது பூசிவந்தால் மங்கு மறையும்.
பாலுண்ணி: முகத்தில் சில குருக்கள் வெண்மையாக மொளுமொளுவென இருக்கும். உள்ளே பால் போன்ற திரவம் நிரம்பி இருக்கும்.
தீர்வு: அமிர்த வெண்ணெய், நலங்கு மாவு, சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கார்போக அரிசி, கிச்சிலிக் கிழங்கு, பாசிப்பயறு, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, ரோஜா இதழ் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, சுத்தம் செய்து அரைத்துக்கொள்ளவும். இதைப் பாலில் கலந்து பூசினால் பலன் கிடைக்கும்.

உறுதியான தலைமுடிக்கு... 5 வழிகள்


பச்சைக் காய்கறிகள்
பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், கறிவேப்பிலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது, முடி வளர உதவும். இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், முடி உதிர்வையும் தடுக்கும். கறிவேப்பிலையைச் சாப்பிடுவதுடன் தலைக்கும் பூசலாம்.
இதர காய்கறிகள் பழங்கள்
கேரட், வெங்காயம், பூண்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, பப்பாளி, வாழை போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் முடி வளர்ச்சியைத் தூண்டும். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு எதிராகச் செயல்படக்கூடியது. மேலும், வைட்டமின் இ- யுடன் இணைந்து, முடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
முளைகட்டியவை
முளைகட்டிய தானியம் மற்றும் பயிறு வகைகள் முடி வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. பயிறு அல்லது தானியத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அதை ஒரு துணியில் கட்டிவைத்தால், முளைவிட ஆரம்பித்துவிடும். அவ்வப்போது, இதில் தண்ணீர் தெளித்தால் போதும், மூன்று நான்கு நாட்களில் நன்கு முளைவிட்டுவிடும். இதில் உள்ள அதிக அளவிலான புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியைத் தூண்டும். முடி உதிர்வைத் தடுக்கும்.
வெந்தயம்
சமையலில் அதிகம் சேர்க்கப்படும் வெந்தயத்துக்கு முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள புரதம் மற்றும் லெசிதின் (Lecithin) என்கிற மூலக்கூறு முடிக்கு வலுவூட்டுகிறது, ஈரப்பதத்தை அளிக்கிறது. இதை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தலையில் பூசிவந்தால், பொடுகுத் தொல்லையைப் போக்கலாம்.
வைட்டமின்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது முடிக்கு ஊட்டம் அளித்து, முடி உடைவதைத் தடுக்கிறது. நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டும், நெல்லிக்காய்ச் சாற்றை தலையில் தடவியும்வந்தால், முடி பிளவுபடுவது தடுக்கப்படும், நல்ல நிறம் கிடைக்கும். 

Tuesday, November 3, 2015

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?


கூந்தலைப் பராமரிக்க எதைப் பயன்படுத்துவது? நாம் திகைத்துப்போகும் அளவுக்கு ஏராளமான எண்ணெய்கள், ஷாம்புக்கள், கண்டிஷனர்களைப் பரிந்துரைக்கின்றன விளம்பரங்கள். இவை விதவிதமான பெயர்களில், நறுமணங்களில் விற்கப்படுகின்றன. விளம்பரங்கள் பரிந்துரைக்கும் எண்ணெயோ ஷாம்புவோ சிலருக்கு நல்ல பலன்களைத் தரும்; வேறு சிலருக்கு அதே நன்மைகளைத் தராது. அப்படியானால், பாதுகாப்பான முறையில் கூந்தலைப் பராமரிப்பது எப்படி?
இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்
கூந்தலில் நாம் தடவும் எண்ணெய்கள் தேங்காய், எள் போன்ற தாவரப் பொருட்களில் இருந்து பிரிக்கப்படுபவை. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எதுவாக இருந்தாலும், தடவிய பின், 20 நிமிடங்கள் வரை கூந்தலில் தடவி ஊறவிட்டு அலசிவிடுவதே சரி.
நம் முடியின் வேர்ப்பகுதி, மண்டைத்தோலில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். இதை செபாஷியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) என்று சொல்வோம். இதில் இருந்து ‘சீபம்’ என்ற எண்ணெய் சுரக்கிறது. ஒரு சிலருக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ சுரக்கலாம். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
எண்ணெய்ப் பசை, வறட்சி என எந்த வகைக் கூந்தலை உடையவராக இருந்தாலும், வெளியில் போகும்போது எண்ணெய் தடவிக்கொண்டு சென்றால், சூழலில் உள்ள தூசு, அழுக்கு, உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய் போன்ற அனைத்தும் சேர்ந்து, பொடுகைக்கொண்டு வந்துவிடும். எனவே, வெளியில் செல்பவர்கள் எண்ணெய் தடவிக்கொண்டு செல்லக் கூடாது.
எண்ணெயைப் பயன்படுத்தும் வழிகள்
எண்ணெயைக் கூந்தலில் தடவி, 20 நிமிடங்கள் ஊறிய உடனே அலசிவிட வேண்டும். இரவில் தடவி, மறுநாள் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயைக் கூந்தலில், சருமத்தில் பூசிக்கொண்டு வெளியே செல்லும்போது சூரிய வெப்பத்தை நேரடியாக இழுத்து சருமம், கூந்தலைப் பாதிக்கும்.
தினமும் காலை கூந்தலை அலசுவதால், முதல் நாள் படிந்த தூசு, அழுக்கு நீங்கிவிடும். சைனஸ், தலைவலி, சளித் தொந்தரவு உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை, 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவிய பின் கூந்தலை அலசலாம்.
இயன்றால், மாலையில் கூந்தலை அலசுவது நல்லது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ததால் ஏற்பட்ட அழுக்கு நீங்கி, முடி கொட்டுவது தடுக்கப்படும்.
முகப்பரு இருப்பவர்களுக்கு, அதிகமாக எண்ணெய் சுரப்புகள் சுரக்கும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும்.
ஷாம்பு, கண்டிஷனர், சீரம் பயன்படுத்தும் முறை
ஷாம்பு: வறட்சி, எண்ணெய், நார்மல் போன்ற அனைத்து கூந்தல் வகையினரும், பி.ஹெச் (pH) 5.5 அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது. ஷாம்பு பயன்படுத்துபவர்கள், அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும்.
கண்டிஷனர்: கண்டிஷனரை தலையில் முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது. கூந்தலில் மட்டும்தான் பூச வேண்டும். கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, நீரால் கூந்தலை அலச வேண்டும். ஏனெனில், கண்டிஷனர் கூந்தலை கோட் செய்ய இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும்.
சீரம்: முடி உதிர்தல் பிரச்னை, நுனி முடி பிளவுகள், அடங்காத முடி, சுருட்டை முடி, சிக்கு விழும் முடி போன்ற பிரச்னை உள்ளோர் சீரம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பின், துவட்டும்போது பாதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் சீரத்தைத் தடவ வேண்டும். இது வெயில், மழை, தூசு, அழுக்கிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கும்.
மெடிகேட்டட் சீரம்: கலரிங் செய்த கூந்தல், ஸ்டரெயிட்னிங் செய்த கூந்தல் போன்றவற்றுக்குப் பிரத்யேக சீரம்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சரி.
மருத்துவரிடம் சென்று எந்த சீரம், ஷாம்பு, கண்டிஷனர் பொருந்தும் என ஒரு முறை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

பளபள சருமத்துக்கு பப்பாளி!


ருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி  அருமருந்து.
சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.
பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.
பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.
சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.
சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
பப்பாளியை மசித்து, தலையில் பூசி், குளித்துவந்தால் முடி உறுதியடையும்; நன்கு வளரும்.
பாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.
குறிப்பு: பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங் பொருளாகச் செயல்படுகிறது. ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின் அமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது. 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.