Sunday, November 8, 2015

உறுதியான தலைமுடிக்கு... 5 வழிகள்


பச்சைக் காய்கறிகள்
பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், கறிவேப்பிலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது, முடி வளர உதவும். இதில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், முடி உதிர்வையும் தடுக்கும். கறிவேப்பிலையைச் சாப்பிடுவதுடன் தலைக்கும் பூசலாம்.
இதர காய்கறிகள் பழங்கள்
கேரட், வெங்காயம், பூண்டு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, பப்பாளி, வாழை போன்றவற்றை எடுத்துக்கொள்வதும் முடி வளர்ச்சியைத் தூண்டும். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு, முடி உதிர்வுப் பிரச்னைக்கு எதிராகச் செயல்படக்கூடியது. மேலும், வைட்டமின் இ- யுடன் இணைந்து, முடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.
முளைகட்டியவை
முளைகட்டிய தானியம் மற்றும் பயிறு வகைகள் முடி வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. பயிறு அல்லது தானியத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அதை ஒரு துணியில் கட்டிவைத்தால், முளைவிட ஆரம்பித்துவிடும். அவ்வப்போது, இதில் தண்ணீர் தெளித்தால் போதும், மூன்று நான்கு நாட்களில் நன்கு முளைவிட்டுவிடும். இதில் உள்ள அதிக அளவிலான புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியைத் தூண்டும். முடி உதிர்வைத் தடுக்கும்.
வெந்தயம்
சமையலில் அதிகம் சேர்க்கப்படும் வெந்தயத்துக்கு முடி வளர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள புரதம் மற்றும் லெசிதின் (Lecithin) என்கிற மூலக்கூறு முடிக்கு வலுவூட்டுகிறது, ஈரப்பதத்தை அளிக்கிறது. இதை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துத் தலையில் பூசிவந்தால், பொடுகுத் தொல்லையைப் போக்கலாம்.
வைட்டமின்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இது முடிக்கு ஊட்டம் அளித்து, முடி உடைவதைத் தடுக்கிறது. நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டும், நெல்லிக்காய்ச் சாற்றை தலையில் தடவியும்வந்தால், முடி பிளவுபடுவது தடுக்கப்படும், நல்ல நிறம் கிடைக்கும். 

1 comment:

  1. Online Casino Sites 2021 - LuckyClub.live
    Enjoy a wide variety of online casino games with the aim to play a thrilling In our LuckyClub review, we luckyclub.live cover all games, software and more.

    ReplyDelete