Monday, February 22, 2016

பனிக்கால பிரச்னைகள்... பதமான யோசனைகள்!

னிக்காலத்தில் முகம், கூந்தல், இதழ், பாதம் மற்றும் நகத்தைப் பராமரிக்கும் வழிமுறைகள்.
பனியிடமிருந்து முகத்தை மீட்க! 

பொதுவாக கோடைகாலத்தில் பளபளவென இருக்கும் சருமம், பனிக்காலத்தில் உலர்ந்து கறுக்கும். வறட்சியால் முகத்தில் வெள்ளைத் திட்டுகள் (வொயிட் பேட்சஸ்) தோன்றும். தினமும் சோப்புக்குப் பதில் முகத்துக்கு க்ளென்ஸிங் மில்க் உபயோகித்து, ஒரு காட்டன் துணியால் முகத்தைத் துடைக்கவும். ஆய்லி சருமம் மற்றும் பருக்கள் (acene) பிரச்னை உள்ளவர்கள் க்ளென்ஸர் பயன்படுத்திய பிறகு கண்டிப்பாக டோனர் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு டோனர் வேண்டாம். மாஸ்ச்சரைஸர் பயன்படுத்தவும். 

முடிகொட்டும் தொல்லை விலக...

கோடையில் சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகக் கூந்தலில் படும்போது, புதிய செல்கள் உருவாகும். அதனால் கோடைக்காலத்தில் முடி உதிர்வு அதிகம் இருக்காது. ஆனால், பனிக்காலத்தில் அல்ட்ரா வயலட் கதிர்கள் கூந்தலில் படாததால் முடி உதிர்வு அதிகரிக்கும். கூந்தல் உலர்ந்துபோகும். இரவு உறங்கும் முன் 10 மில்லி ஆலிவ் ஆயிலுடன் 2 சொட்டு லேவண்டர் ஆயில் அல்லது அரோமா ஆயில் கலந்து கூந்தலில் தடவி ஷவர்கேப் அணிந்து படுக்கவும். மறுநாள் காலை தலைகுளிக்கவும். இப்படி வாரம் ஒருமுறை செய்துவந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முடி உதிர்வு தவிர்க்கப்பட்டு, கூந்தல் உலர்வடையாமல் இருக்கும். இதைச் செய்ய முடியாதவர்கள், `கே.இஸட்’ 

(KZ - Ketoconazole) என்ற பூஞ்சைக்கொல்லி (anti fungal) மற்றும் `Zinc pyrithione’ என்ற கெமிக்கல் உள்ள ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், லோரியல் போன்ற ஷாம்புக்களைப் பயன்படுத்தலாம். கூந்தலின் வறட்சி நீங்கி மென்மையாக, ஹேர் கண்டிஷனர் அல்லது ஹேர் சீரம் பயன்படுத்தலாம். 

இதழ்களுக்கு நெய்!

பனிக்காலத்தில் வெடிப்பது, உலர்ந்து கறுப்பாவது என்று உதடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். பசுநெய்யுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் குழைத்து உதடுகள் முழுக்கத் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து பஞ்சை தண்ணீரில் தோய்த்து உதட்டில் ஒற்றி எடுக்கவும். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்து வர... கருமை, வெடிப்புகள் மறையும்.

பாதவெடிப்பு...போயே போச்சு!

பித்தவெடிப்பு உள்ளவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஐந்து சொட்டு எலுமிச்சைச் சாறு, ரெண்டு கிராம் கல் உப்பு கலந்து பித்தவெடிப்புகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவி, பிறகு குளிர்ந்த நீரில் கால்களைக் கழுவவும். இதை தொடர்ந்து செய்துவர... பித்தவெடிப்பு சரியாகும். 

நகம் உடைவதைத் தவிர்க்க...

பனிக்காலத்தில் நகம் உடைவதைத் தவிர்க்க, அதை ட்ரிம் செய்வது அவசியம். ஜெலட்டின் கிறிஸ்டல்ஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டீ கப் அளவு வெந்நீரில் கரைக்கவும். உள்ளங்கைகளை நனைக்க உதவும் அளவிலான, அகலமான பாத்திரத்தில் அந்தத் தண்ணீரை மாற்றி, நகங்கள் அதில் மூழ்கியிருக்குமாறு கைகளை நீரில் அமிழ்த்தவும். 10 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து, கைகளை காட்டன் துணியால் துடைக்கவும். தவிர, இந்தப் பிரச்னைக்கு ஹேண்ட் அண்ட் பாடி லோஷன் அல்லது நெயில் க்ரீமும் அப்ளை செய்யலாம்

கவனிக்க... 

கோடைகாலத்துக்கு மட்டுமல்ல... பனிக்காலத்திலும் தொடர்ந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். 

பனிக்காலத்திலும் இரண்டு முறை (விரும்பினால் வெந்நீரில்) குளிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள பூஞ்சை நீங்கும்.

No comments:

Post a Comment