Saturday, August 8, 2015

10 கட்டளைகள் சருமம்

உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது, தோலில் வறட்சி, வெடிப்புப் பிரச்னைகள் தோன்றும். சருமத்தில் மாய்ஸ்சரைசர் கிரீமைத் தடவுவது, நீர்ச்சத்துள்ளக் காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளுவது, தினமும் முன்று முதல் ஐந்து லிட்டர் திரவ உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
உண்ணும் உணவு, உபயோகிக்கும் பொருட்களால், சிலருக்குச் சருமத்தில் அரிப்பு, தடிப்பு, சிவந்துபோகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதற்குச் சரும மருத்துவரை அணுகி, சிகிச்சைப் பெறுவது நல்லது. ஒத்துக்கொள்ளாத உணவை ஒதுக்குவது சருமத்தைக் காக்கும்.
ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில்  வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலின், ஒருநாள் தேவையான, 90 சதவிகித இரும்புச் சத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறது. சருமப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதுடன், சருமம் பொலிவடையும்.
சில பெண்களுக்கு முகம் மற்றும் இதர பாகங்களில், ஆண்களைப் போல அதிக முடி இருக்கும். இது ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம். தற்காலிகத் தீர்வாக, த்ரெட்டிங் மற்றும் வாக்சிங் உதவும். நிரந்தரத் தீர்வுக்கு, லேசர் சிகிச்சை முறை கைகொடுக்கும்.   
பாதங்களில் வெடிப்பு, கால் ஆணி, புண், கொப்பளங்கள் ஏற்படுவதற்குப் பூஞ்சையும், சரியான பராமரிப்பின்மையும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. பூஞ்சைத் தொற்றாக இருந்தால், சரும மருத்துவரைச் சந்திக்கவும். பராமரிப்பின்மை பிரச்னையாக இருந்தால், ‘ப்யூமிக் ஸ்டோன்'னால் பாத சருமத்தை நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். வாரம் இருமுறை பாதங்களை வெந்நீர் டப்பில் விட்டு, எப்சாம் உப்பு (Epsom salt) சேர்த்து, 15 நிமிடங்கள் வைத்திருந்த பின் கழுவலாம்.
தோல் வெளிறிப்போய், கண்ணுக்குக் கீழ் கருவளையம், இமை, புருவமுடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு இரும்புச் சத்துக் குறைப்பாடு காரணமாக இருக்கலாம்.  தினமும் ஒரு கீரை, பேரீச்சம்பழம், கறிவேப்பிலை, கருப்பு எள், உலர் நெல்லிக்காய் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.
 
ரோஜா இதழ்கள், மல்லி, சாமந்தி போன்ற பூக்களை, நன்கு கொதித்த நீரில் போட்டு மூடி, இரண்டு மணி நேரம் கழித்து, ஃப்ரிட்ஜில்வைத்து, அந்த நீரால் குளித்துவர, சருமம் பளபளக்கும். வியர்வை துர்நாற்றத்தையும் போக்கும். 
தோலில்  உள்ள வியர்வைத் துளைகளில் அடைப்பு இருந்தால், அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு, சின்னச் சின்னக் கொப்பளங்களாக,  வியர்க்குரு தோன்றுகிறது. தினமும் இரண்டு முறை குளிப்பது, மூன்று முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, நல்ல காற்றோட்டமான அறையில் இருப்பது போன்றவை சருமப் பிரச்னையிலிருந்து காக்கும்.
சூரியக் கதிர்களால் தோல் பாதிக்கப்பட்டு கருத்துப்போகும். இதைத் தடுக்க, வெளியில் செல்லும்போது, ‘எஸ்பிஃஎப் 15’ சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்த வேண்டும். கறுப்புக் குடைகளைத் தவிர்த்து, கலர் குடைகளைப் பயன்படுத்தலாம்.
கேரட், பீட்ரூட், தக்காளி, திராட்சை, பப்பாளி, மாதுளை, சிட்ரஸ் பழங்கள், நெல்லி, வெள்ளரி, யோகர்ட், மீன், பாதாம், வால்நட் ஆகியவை, சருமத்தின் கவசங்கள். இவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment