Sunday, August 9, 2015

இயற்கை தரும் பேரழகு !


பாரம்பரிய அழகு ரகசியங்களை முறையாகக் கடைப்பிடித்தால், உடலுக்கு நிரந்தர ஆரோக்கியமும்  அழகும் சேரும் என்கிறார் இயற்கை மற்றும் சித்த மருத்துவர் மகேஷ்வரி. அவர் தரும் சில நேச்சுரல் டிப்ஸ் இங்கே...
1 கிருமிநாசினியாகும் வேப்பிலை
அழகுப் பொருட்களின் ராணி. பிசுபிசுப்பு, எண்ணெய் வழிதல், பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்னைகள் தீர, தினமும் வேப்பிலைத் தண்ணீரால் முகத்தைக் கழுவிவருவது நல்ல பலன் தரும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால், முகச் சுருக்கங்கள் நீங்்கி, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும்.  இது சரும நோய்களுக்கான சிறந்த கிருமிநாசினி. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளிடமிருந்தும், சூரியக் கதிர்களிடமிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
2 கரும்புள்ளிகளை நீக்கும் துளசி
டீன் ஏஜில் தோன்றும் பருக்களை மறையச்செய்யும். துளசியில் பால் சேர்த்து அரைத்து, விழுதாக்கி முகத்தில் தடவினால், பருக்கள், கரும்புள்ளிகள் மறையும். வாரம் மூன்று முறை இரண்டு துளசி இலைகளைச் சாப்பிட்டுவர, ரத்தம் தூய்மை அடைந்து, சருமம் மிளிரும். கீழாநெல்லி, துளசி இலைகளை அரைத்து, முகத்தில் பேக் போட்டுக் கழுவினால், கரும்புள்ளிகள், திட்டுக்கள் நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
3 இயற்கை சோப் - கடலை மாவு / கொண்டைக்கடலை / பச்சைப் பயறு மாவு
எண்ணெய்ப் பசை நீங்க கடலை மாவும், முகத்தை ஸ்கரப் செய்ய கொண்டைக் கடலை மாவும், முகம் ஊட்டச்சத்துகளைப் பெற பச்சைப்பயறு மாவும் உதவும். மேலும், இவை சருமத்துக்குப் புரதத்தைத் தரக்கூடியவை. சருமம் மென்மையாகும். உடலுக்கு இயற்கையான நறுமணத்தைத் தரும். சருமத்தில் உள்ள கருமையைப் பச்சைப்பயறு மாவு நீக்கும்.
4 தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்
முகத்தைத் தங்கமாக ஜொலிக்கவைப்பதால்தான், அழகுக்கலையில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கடலை மாவுடன் கஸ்தூரி மஞ்சள், தயிர் கலந்து, முகத்தில் மசாஜ் செய்ய, ரத்த ஓட்டம் சீராகப் பாயும். முகம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவுகூடும். எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினர், கஸ்தூரி மஞ்சளுடன் சந்தனம், ஆரஞ்சு சாறு கலந்து, முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், எண்ணெய்ப் பசை நீங்கி, சருமம் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து, பாத வெடிப்பில் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், பாத வெடிப்புகள் குணமாகும்.
5 தொற்றுகளைக் குணமாக்கும் குங்குமப்பூ
குங்குமப்பூவுடன் தேன் கலந்து, முகத்தில் தடவிவர, இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். பிறப்புஉறுப்பு, அக்குள் போன்ற இடங்களில் பூஞ்சைத் தொற்று இருந்தால், குங்குமப்பூவில் தேன் சேர்த்துத் தடவலாம்.  பாலில் அரை மணி நேரம் குங்குமப்பூவை ஊறவைத்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.  பொலிவு இழந்த சருமத்துக்கும், பருக்கள் நிறைந்த சருமத்துக்கும் துளசி, குங்குமப்பூ கலந்த  விழுதைப் பூசிவர, நல்ல பலன் கிடைக்கும்.
6 இயற்கை மாய்ஸ்சரைசர் - தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையைத் தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள். மோரினால்  முகத்தைக் கழுவ, வெயிலால் ஏற்படும் கருமை மறையும்.
7 சருமக் குளிர்ச்சிக்கு சந்தனம்
சருமம் பளபளப்பாக இருக்க, சந்தனத்துடன் பால் கலந்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.  ஃபேஷியல் செய்ய நேரம் இல்லை எனில், பாதாம், பால், சந்தனம் ஆகியவற்றைக் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகத்தில் ஈரப்பதமும், பளபளப்பும் கூடும்.  அரிசி மாவுடன் சந்தனத்தைக் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்தால் மூக்கு, தாடைப் பகுதியில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகம் மென்மையாக மாறும். சருமத்தில் சந்தனத்தைப் பூசிவர, வியர்வை சுரப்பிகளைத் தூண்டி, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.
8  பளபளப்பான சருமத்திற்குத் தேன்
தேனுடன் கொண்டைக் கடலை மாவு சேர்த்துக் கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளபளக்கும். தேவையற்ற முடியை அகற்ற தேன், சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து, சூடு செய்த பின், சருமத்தில் தடவி, பஞ்சைவைத்து முடிகளை நீக்கலாம். வெயிலினால் கருத்த சருமம், பளபளப்பு பெற ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து, முகத்தில் தடவலாம்.
9  வயதாவதைத் தடுக்கும் கற்றாழை
கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) குழாய் நீரில் ஏழெட்டு முறை அலசி, முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ, சருமம் வயதாவது தடுக்கப்படும். கற்றாழையின் சத்துக்கள், சருமத் துளைகளில் ஊடுருவி, இளமையான தோற்றத்தைத் தரும்.  சருமத்தை மிருதுவாக்கும். மாய்ஸ்சரைசர் மற்றும் டோனராக செயல்படும். பருக்கள் முற்றிலுமாக நீங்கும். ஆண்கள் ஷேவிங் செய்த பிறகு, கற்றாழை ஜெல்லைத் தடவ, சருமப் பாதிப்புகள் ஏற்படாது. ஈரப்பதத்தை சமன்படுத்தவும், சரும எரிச்சலைப் போக்கவும் பயன்படும்.
10 க்ளென்சராக செயல்படும் நெல்லி
நெல்லிப் பொடியைத் தண்ணீரில் கலந்து, தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், பொடுகு முற்றிலும் நீங்கிவிடும். மருதாணிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, அவுரிப் பொடி மூன்றையும் கூந்தலில் பூச, இளநரை மறைந்து, இயற்கையான கருமை நிறம் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும்.
சருமத்துக்கு க்ளென்சராக செயல்படும். தினமும் காலை, ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர, முடி உதிர்தல் பிரச்னை நிற்கும். நெல்லிச் சாற்றை முகத்தில் தடவினால், அதில் உள்ள கொலஜன் (வெண்புரதம்) சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும்.

1 comment:

  1. Best Roulette games 2021 - Jammy Hub
    The best Roulette games in 전라남도 출장안마 2021! 안성 출장마사지 Find the best roulette games to play 고양 출장샵 at trusted gambling titanium wire sites and win big with Jammy Hub. 대전광역 출장샵

    ReplyDelete